கள்ளக்காதல் விவகாரத்தில் தலையில் கல்லைபோட்டு எலக்ட்ரீசியன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது. 

கிருஷ்ணகிரி அருகே உள்ள கொண்டேப்பள்ளியை சேர்ந்தவர் திருப்பதி(39). எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வெளியெ சென்றார். இதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில், நேற்று மாலை திருப்பதி ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனம் பாஞ்சாலியூர் அருகே செங்கல் சூளை பக்கமாக இருந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அப்போத, அப்பகுதியில் உள்ள பனை மரம் ஒன்றின் கீழ் தலையில் கல்லை தூக்கி போடப்பட்ட நிலையில் திருப்பதி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதனையடுத்து, இவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொலை செய்யப்பட்ட திருப்பதிக்கு பாஞ்சாலியூர் அருகே பூசாரிப்பட்டியைச் சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்தது. இதை அறிந்த அப்பெண்ணின் கணவர் திருப்பதியை கண்டித்துள்ளார். ஆனாலும், திருப்பதி கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர் திருப்பதியை கொலை செய்திருக்கலாம் என போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.