திண்டிவனத்தில் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசகமாக இருப்பதை பார்த்த கணவர் ஆத்திரத்தில் அந்த நபரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் ரகுவரன் ( 30). கூலி தொழிலாளி. இவரும், அதேபகுதியை சேர்ந்த மகாலட்சுமி (28) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மகாலட்சுமி, சென்னை திருவொற்றியூரில் உள்ள உறவினர் ராஜ் மகன் விக்னேஷ்(25) என்பவரது வீட்டில் தங்கி தியாகராயநகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வேலைபார்த்து வந்தார். அப்போது அவருக்கும், விக்னேசுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலமாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். 

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜவுளிக்கடை மூடப்பட்டது. இதனால் மகாலட்சுமி சொந்த ஊரான திண்டிவனத்துக்கு வந்து கணவர், குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், கள்ளக்காதலனை பார்த்து ரொம்ப நாட்கள் ஆனதால் தன்னை ஒருமுறை பார்த்து விட்டு செல்லுமாறு மகாலட்சுமி கூறினார். கள்ளக்காதலியின் அழைப்பை ஏற்று, விக்னேஷ் நேற்று திண்டிவனத்திற்கு வந்துள்ளார். அப்போது தனது கணவர் வீட்டை விட்டு வெளியே சென்றதும், மகாலட்சுமி செல்போனில் விக்னேசை வீட்டுக்கு வருமாறும் அழைத்துள்ளார். 

உடனே விக்னேஷ், கள்ளக்காதலியின் வீட்டிற்கு வந்தார். அந்த சமயத்தில் வீட்டில் இருந்த குழந்தைகளை விளையாடி விட்டு வருமாறு வெளியே அனுப்பிவிட்டார். இதனையடுத்து, இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, வெளியே சென்றிருந்த கணவர் ரகுவரன், திடீரென வீட்டுக்கு வந்து விட்டார். அங்கு தனது மனைவியுடன் விக்னேஷ் உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

இதனால், ஆத்திரமடைந்த ரகுவரன் தனது மனைவியை ஆபாசமாக திட்டி கடுமையாக தாக்கினார். பின்னர்,  வீட்டில் இருந்த கத்தியை எடுத்து விக்னேசை சரமாரியாக குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விக்னேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ரகுவரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.