கள்ளக்காதல் விவகாரம் மனைவிக்கு தெரிய வந்ததால் கழுத்தை நெரித்து கொலை செய்து தற்கொலை என நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கர்நாடகா மாநிலம் வேம்கல் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார் இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு சாந்தா என்பவருடன் திருமணமாகி உள்ளது. பிரவீன்குமார் மற்றும் சாந்தா ஆகிய இருவரும் கடந்த வாரம் ஒசூரில் நடைப்பெற்ற திருவிழாவில் பங்கேற்க ஒசூர் மாநகராட்சி சுண்ணாம்பு தெரு பகுதியில் உள்ள பிரவீனின் நண்பர் வீட்டிற்கு வந்து தங்கியிருந்துள்ளார்கள். 

இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு தம்பதிகளுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இறுதியில் ஆத்திரமடைந்த பிரவீன்குமார் சாந்தாவின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர், மனைவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சாந்தாவின் ஊரான கோலார் பகுதிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து, வரின் பெற்றோரிடம் சாந்தா தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக கூறி உடலை கொடுத்துவிட்டு தலைமறைவாகி உள்ளார்.

அப்போது, சாந்தாவின் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த பெற்றோர் மீண்டும் உடலை ஒசூருக்கு எடுத்து வந்து போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து, தலைமறைவாகி இருந்த பிரவீன்குமாரை போலீசார் கைது செய்தனர். 

இதனையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் பிரவீன்குமார, தனது மனைவி சாந்தாவை கொலை செய்தது தெரியவந்துள்ளது. பிரவீன்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் இருந்த கள்ளக்காதல் விவகாரம் சாந்தாவிற்கு தெரிந்ததும் அடிக்கடி வீட்டில் சண்டையிட்டு வந்ததால் திட்டமிட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது.