தாராபுரத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 2வது கணவரை கொலை செய்த மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட தாரை காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் தேவி (36). இவர் உடுமலை சாலை பெரியார் சிலை அருகே தள்ளுவண்டியில் பலவியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கும் தாராபுரத்தைச் சேர்ந்த முனியப்பன் என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இருவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். 

இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி (35) என்பவரை தேவி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 மற்றும் 3 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தேவிக்கும் தாராபுரம் கொழிஞ்சிவாடியைச் சேர்ந்த இளைஞர் அபிஷேக் (20) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.  கடந்த 14ம் தேதி காதலர் தினத்தன்று தனது இளம் காதலன் அபிஷேக்கையும் அழைத்துக்கொண்டு கீரனூரில் உள்ள கணவரின் வீட்டுக்கு தேவி சென்றார். அங்கு தேவிக்கும் கணவர் தண்டபாணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. 

இதில், தேவி தனது காதலன் அபிஷேக்குடன் சேர்ந்து கணவன் தண்டபாணியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் இருவரும் உடலை சாக்கு மூட்டையில் வைத்து ஒரு வேனில் எடுத்து சென்றுள்ளனர். தாராபுரம் மதுரை செல்லும் சாலையில் சிவராஜ் என்பவரது நெல்வயல் கிணற்றுக்குள் கல்லை கட்டி உடலை வீசியுள்ளனர்.

இதையடுத்து தண்டபாணியை காணவில்லை என கீரனூர் காவல் நிலையத்தில் அவரின் சகோதரி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தண்டபாணியை தேடி வந்தனர். தண்டபாணியின் மனைவி தேவி மீது சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தனது காதலன் அபிஷேக் உடன் சேர்ந்து கணவன் தண்டபாணியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, இருவரையும் கைது சிறையில் அடைத்தனர்.