தருமபுரி அருகே லாரி ஓட்டுநர் மர்மமான முறையில் இறந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரை தலையணையால் அமுக்கி கொலை செய்த மனைவி, கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். 

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த திண்டல் ஊராட்சிக்கு உட்பட்ட பிச்சினூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன்(32). லாரி ஓட்டுநர். இவரது மனைவி நதியா(27) இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். ஊரடங்கு உத்தரவால் பணிக்குச் செல்லாமல் மாரியப்பன் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன், இரவு வழக்கம்போல் தனது அறைக்கு மாரியப்பன் தூங்க சென்றார், ஆனால், காலை வெகுநேரமாகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அவரது அறைக்கு சென்று பார்த்தபோது மாரியப்பன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து அவரது தாயார் மல்லிகா(53). காரியமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாரியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், விசாரணை நடத்தினர். இரவு தூங்க சென்ற மாரியப்பன், காலையில் மர்மமான முறையில் உயிரிழந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது. 

இதனையடுத்து, போலீசார் மாரியப்பனின் மனைவியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. நதியாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த முரளிக்கும் (23) இடையே கள்ளத்தொடர்பு இருந்தது. தனிமையில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இவர்களது கள்ளக்காதல் சில தினங்களுக்கு முன்பு கணவர் மாரியப்பனுக்கு தெரியவந்தது. இது தொடர்பாக கள்ளக்காதலன் முரளிக்கும், மாரியப்பனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பானது.

இதனையடுத்து, தங்களது கள்ளக் காதலுக்கு இடையூராக இருக்கும் மாரியப்பனை கொலை செய்ய நதியாவும், முரளியும் திட்டமிட்டனர். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன் இரவு மாரியப்பன் வீட்டிற்கு வந்த முரளி, நதியாவுடன் உடன் சேர்ந்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த மாரியப்பனை தலையணையால் அமுக்கி கொலை செய்தது தெரியவந்தது இருவரையும் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.