கோயில் தர்மகர்த்தா கொலை வழக்கில் திடீர் திருப்பமாக தாயுடன் கள்ளத்தொடர்பு  வைத்திருந்ததால் தாத்தாவை கத்தியால் குத்தி கொன்றேன் என பேரன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள மேலப்பாளையூர் கிராமத்தை சேர்ந்தவர் தவலிங்க செல்வராயர்(72). அப்பகுதியில் உள்ள செல்லியம்மன், மாரியம்மன் உள்ளிட்ட கோயில்களில் தர்மகர்த்தாவாக இருந்து வந்தார். இவருக்கு புஷ்பவல்லி என்ற மனைவியும் 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 8ம் தேதி இரவு வீட்டில் இருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் 9ம் தேதிகாலை தேவங்குடி மெயின் ரோட்டில் உள்ள தனிநபர் ஒருவருக்கு தரிசு நிலத்தில் தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் ரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார். 

இதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து, தர்மகர்த்தாவின் செல்போனில் பதிவான எண்களை கொண்டு விசாரணை செய்தபோது அவர் இறந்த 8ம் தேதியன்று  இரவு அவரது செல்போனில் மூத்த மகனான வெங்கடேசன் மகன் ரஞ்சித்குமார்(28) என்பவருக்கு அடிக்கடி போன் சென்றுள்ளது. இதனால், சந்தேகமடைந்த ரஞ்சித்குமாரிடம் விசாரித்தனர்.  அவர் முன்னுக்குப் பின் முரணான பதிலை கூறியுள்ளார். தொடர்ந்து காவல் நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

அதில், ரஞ்சித்குமார் தனது நண்பர் செல்வக்குமார்(35) என்பவருடன் சேர்ந்து செல்வராயரை கொலை செய்தது தெரியவந்தது. கொலைக்கான காரணம் குறித்து ரஞ்சித்குமார் அளித்த வாக்குமூலத்தில்;- என் அத்தை இளையராணியின் கணவர் ராமையா வெளிநாட்டில் இருந்து வருகிறார். அவர் அனுப்பும் பணத்தை அப்பகுதியில் பலருக்கும் என் தாத்தா செல்வராயர் வட்டிக்கு விட்டு வருகிறார். வட்டி பணத்தை நான் தான் வசூலித்து வந்து அவரிடம் கொடுப்பேன். இதனால், அவ்வப்போது செலவுக்கு எனக்கு பணமும் கொடுத்து வந்தார். 

இந்நிலையில், என் தாயுடன் இவர் கள்ளத்தொடர்பில் இருந்தார். நான் வீட்டிற்கு சென்ற போது இருவரும் ஒன்றாக இருந்ததை நேரில் பார்த்தேன். அதிலிருந்து என் தாத்தாவின் தொடர்பை துண்டித்தேன். இதனால், தாத்தாவை நண்பர்களுடன் சேர்ந்து கழுத்து, வாய் பகுதியில் குத்தினேன். இதில், அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார் என கூறியுள்ளார்.