குகைக்குள் உல்லாசமாக இருந்துவிட்டு கள்ளக்காதலியை  கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவத்தில் கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். 

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த கீழ்கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பு(42) கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன் 2 மகள்கள் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. இந்நிலையில், வேலூர் அடுத்த கருகம்பத்தூரைச் சேர்ந்தவர் வத்சலா. கட்டிட தொழிலாளி கணவரை இழந்த இவருக்கு ஒரு மகன் உள்ளார். அவருக்கு திருமணமாகி கணவருடன் வசிக்கிறார். இந்நிலையில், அன்பும் வத்சலாவுக்கும் ஒன்றாக கட்டிடத் தொழில் செய்து வந்தனர்.

அப்போது இவர்களுக்கு இடையே நட்பு ஏற்பட்டு நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. நீண்ட ஆண்டுகளாக இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில் வத்சலா கடந்த 7ம் தேதி திடீரென மாயமாகியுள்ளார். இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் 8ம் தேதி வேலூர் வடக்கு  காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், காட்பாடி அடுத்த வள்ளிமலையில் உள்ள சமணர் கோயில் அழுகிய நிலையில் பெண் சடலம் இருப்பதால் மேல்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் குகையினுள் சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சடலமாக கிடந்தது கடந்த 7ம் தேதி முதல் காணவில்லை என தெரிவிக்கப்பட்ட வத்சலா என்பதும் இவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் அன்புவை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், வத்சலாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தியதில் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.