கள்ளக்காதலை கைவிடாத தொழிலதிபரை கழுத்தை நெரித்து கொலை செய்து காரில் வைத்து எரித்த மனைவி மற்றும் மகனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே முன்னூர் ஊராட்சிக்குட்பட்ட வேலம்பாளையம் பகுதியில் தீப்பற்றி எரிந்த நிலையில் காருடன் ஆண் சடலம் இருப்பதாக அந்த வழியாக வந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காரை பார்வையிட்டனர். அப்போது காரின் பின்பக்க இருக்கையில் எரிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இதையடுத்து எரிந்த நிலையில் கிடந்தவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனையடுத்து, அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என போலீசார் விசாரணை நடத்தினர். காரின் பதிவு எண்ணை கொண்டு விசாரித்தபோது, அவர் கரூர் நொய்யல் குறுக்குசாலை ரயில்வே கேட் பகுதியில் வசித்து வந்த மணி (எ) ரங்கசாமி (48) என்பதும், பாக்குதட்டு தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரங்கசாமியின் மனைவி கவிதா(39), மகன் அஸ்வின்(19) ஆகியோரிடம் நடத்திய விசாரணை நடத்தினர்.

ரங்கசாமிக்கு குடிப்பழக்கமும், அதே நிறுவனத்தில் கூலி தொழிலாளியான ஒரு பெண்ணுடன் கள்ள உறவும் இருந்துள்ளது. இதுதொடர்பாக கடந்த இரு நாட்களாகவே கணவன், மனைவி இடையே தகராறு நிலவி வந்துள்ளது. இந்நிலையில் இரவு நடந்த வாய் தகராறில் ரங்கசாமி, மனைவி மற்றும் மகனை தாக்கியதால் ஆத்திரமடைந்த மகன் தந்தையை கழுத்தை நெரித்துள்ளார். இதில், ரங்கசாமி இறந்து போனதும் காரில் பின் சீட்டில் படுக்க வைத்து டீசலை ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர்.  

இதையடுத்து கவிதா மற்றும் அஸ்வின்குமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அரசு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு ரங்கசாமியின் உடலை சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பெற்ற தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் கரூரில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.