உல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததால் எனது பேரனை அடித்து கொலை செய்துவிட்டதாக பாட்டி புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் வள்ளி (45). இவரது மகள் கீர்த்திகாவுக்கு (20), கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அன்னை சத்யா நகரை சேர்ந்த மணியுடன் (24),  இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. கடந்த 8 மாதங்களுக்கு முன், கீர்த்திகாவுக்கு ஒரே பிரசவத்தில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த கீர்த்திகா, தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு எம்ஜிஆர் நகரில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதனிடையே, அதே பகுதியை சேர்ந்த முனியப்பனுடன் (25) கீர்த்திகாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இந்நிலையில், சில நாட்களுக்கு முன், கீர்த்திகா தனது இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையை மட்டும் தூக்கிக்கொண்டு, வீட்டை விட்டு வெளியேறி, முனியப்பனுடன் சிவகங்கை  சென்று அங்கு கூலி வேலை செய்து வசித்து வந்துள்ளார். இதற்கிடையே, கீர்த்திகாவிடம் இருந்த குழந்தை திடீரென உடல் நிலைக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக கூறினார். இதையடுத்து, கீர்த்திகா உயிரிழந்த குழந்தையை சென்னையில் தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து, தனது கள்ளக்காதலன் முனியப்பனுடன் நேற்று முன்தினம் சென்னைக்கு வந்துள்ளார். 

எம்ஜிஆர் நகரில் உள்ள தாய் வள்ளி வீட்டிற்கு வந்த கீர்த்திகா, குழந்தை இறந்தது குறித்து கூறி அழுதுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த வள்ளி, தாயை பிரிந்து இருக்கும் குழந்தை என்னுடன் நன்றாக இருக்கும் போது, தாயான உன்னுடன் இருந்த குழந்தை எப்படி இறக்கும் என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். அதோடு இல்லாமல் மகள் கீர்த்திகா மற்றும் அவரது கள்ளக்காதலன் முனியப்பன் மீது எம்ஜிஆர்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், எனது பேரன் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறியுள்ளனர். அதனையடுத்து, போலீசார், குழந்தை சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், குழந்தை இறந்தது குறித்து கீர்த்திகா மற்றும் அவரது கள்ளக்காதலன் முனியப்பனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.