திருமங்கலம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வங்கி ஊழியர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகர் ஆணைக்குழாய் மேலத்தெருவை சேர்ந்தவர் முத்தையா. இவரது மனைவி காளீஸ்வரி. இவர்களது மகன் மணிகண்டன் (28). தனியார் வங்கியில் கடன் முகவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகில் உள்ள கப்பலூர் காந்தி நகரை சேர்ந்த சிவக்குமார்-சித்ரா தேவியின் மகள் ஜோதிலட்சுமி (21) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் 6 மாதங்களுக்கு முன்பு ஜோதிலட்சுமியின் தந்தை சிவக்குமார் மற்றும் சித்ராதேவி ஆகியோர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். தந்தையை கவனித்து கொள்வதற்காக ஜோதிலட்சுமி தனது குழந்தையுடன் தாய் வீட்டுக்கு வந்தார். அதேபோல், அவருக்கு உதவியாக உறவினர் கார்த்திக்கும் (24) மருத்துவமனையில் உடனிருந்துள்ளார். அப்போது ஜோதிலட்சுமிக்கும், கார்த்திக் (24) என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. தனிமையில் இருவரும் வெளியில் சென்றும், உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனிடையே ஜோதிலட்சுமியின் தந்தை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இதையடுத்து ஜோதிலட்சுமி தனது குழந்தையுடன் விருதுநகரில் உள்ள கணவர் வீட்டுக்கு சென்று விட்டார். அப்போதும் மனைவி ஜோதிலட்சுமி நீண்ட நேரமாக போனில் பேசிக்கொண்டிருந்தார். இதனால், சந்தேகமடைந்த கணவர் மனைவி கண்டித்துள்ளார். 

இதனையடுத்து, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஜோதிலட்சுமி கோபித்துக் கொண்டு தனது குழந்தையுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதை அறிந்து கொண்ட கார்த்திக், ஜோதிலட்சுமியின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரிடம் ஜோதிலட்சுமியை 2-வதாக தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறியுள்ளார். ஆனால், அவரது பெற்றோர், ஜோதிலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டதால் மறுத்தவிட்டனர். இதனால், கடும் ஆத்திரத்தில் வீட்டை வீட்டு வெளியேறினார். 

இந்நிலையில், நேற்று காலை மணிகண்டன் வழக்கம் போல வேலைக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கார்த்திக் குடும்ப பிரச்சனை குறித்து சமரசம் பேச ஜோதிலட்சுமியின் பெற்றோர் அழைப்பதாக கூறி மணிகண்டனை அழைத்து சென்று கத்தியால் கொடூரமாக கொலை செய்துள்ளார். இதனையடுத்து, ஜோதிலட்சுமியின் அம்மாவிடம் மருமகனை கொலை செய்து விட்டேன். இப்போது உன் மகளை எனக்கு திருமணம் செய்து கொடு என்று கூறியுள்ளார். இதனையடுத்து, மணிகண்டனின் பெற்றோர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், கொலை தொடர்பாக வழக்கழு்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள கார்த்திக்கை தேடி வருகின்றனர்.