கணவனை பிரிந்து சென்று கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்திய மனைவியை நைசாக பேசி கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை செங்குன்றம் பொதுப்பணித் துறை  ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் முருகன் (32). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சுகன்யா (26). இவர்களுக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர். சுகன்யாவுக்கும்,  நாரவாரிகுப்பத்தை சேர்ந்த பாண்டி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த முருகன், மனைவியை கண்டித்துள்ளார். இதையொட்டி கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

 இதையடுத்து சுகன்யா, கணவரை பிரிந்து சென்று கள்ளக்காதலன் பாண்டியுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை முருகன், மனைவியை பார்க்க சென்றார். அங்கு அவரை சமாதானம் செய்து, தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி அழைத்தார். அதன்பேரில், 2 பேரும் ஆட்டோவில் வீட்டுக்கு புறப்பட்டனர். சிறிது தூரம் புறப்பட்டதும் ஆட்டோவை சாலையோரமாக முருகன் நிறுத்தினார். 

பின்னர், மறைத்து வைத்திருந்த கத்தியால், மனைவி சுகன்யா கழுத்தை அறுத்தார். வலியால் துடித்த சுகன்யாவின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவந்தனர். உடனே முருகன், மனைவியை  மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறேன் என கூறி ஆட்டோவில் ஏற்றி சென்று, புழல் ஏரி அருகே நடுவழியில் இறக்கிவிட்டு சென்றார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பெண்ணை உடனே அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கிடையில் முருகன், மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றதாக, செங்குன்றம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.