சென்னையில் மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த கணவர் பீர் பாட்டிலை உடைத்து 15-க்கும் மேற்பட்ட இடங்களில் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை முகப்பேரைச் சேர்ந்த குமரன் என்பவருக்கும், ஆவடியைச் சேர்ந்த காமாட்சிக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். காமாட்சிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. காமாட்சி கடந்த 6 மாதத்திற்கு முன் குழந்தைகள் 3 பேரையும் கணவர் வீட்டிலேயே விட்டுவிட்டு ஆவடியில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றுவிட்டார்.  

அங்கு வேறுவொருவருடன் காமாட்சி கள்ளத்தொடர்பில் இருப்பதாக குமரனுக்கு தெரியவந்துள்ளது. மேலும், இவர்களது விவாகரத்து வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு காமாட்சி, தனது குழந்தைகளை பார்க்க அண்ணாநகரில் உள்ள ராஜன் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, அவர் ராஜனிடம் தகராறில் ஈடுபட்டுவிட்டு, அங்கிருந்து சென்றார்.

இந்நிலையில் நேற்று மதியம் ராஜன் வீராபுரத்தில் வசிக்கும் காமாட்சி வீட்டுக்கு வந்து, இனிமேல் எனது குழந்தைகளை பார்க்க வீட்டுக்கு வரக்கூடாது என காமாட்சியிடம் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், காமாட்சியின் கள்ளக்காதல் தொடர்பாக குமரன் கேட்டதால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த குமரன் தான் ஏற்கனவே கொண்டு வந்திருந்த பீர் பாட்டிலை உடைத்து காமாட்சியை சரமாரியாக குத்தினார். 15-க்கும் மேற்பட்ட இடங்களில் குத்து விழுந்ததால் காமாட்சிக்கு ரத்தும் கொட்டியதோடு அவர் அலறி துடித்துள்ளார். 

அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் தப்பியோட முயன்ற குமரனைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர், அக்கம் பக்கத்தினர் காமாட்சியை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கிருந்து  மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் கணவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.