தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கொடைக்கானல் சாலையில் டம்டம் பாறை அருகே கடந்த 18-ம் தேதி இளைஞர் ஒருவரின் பிணம் கிடந்தது. கழுத்தறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த ஆண் பிணத்தைக் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீஸார்  நடத்திய விசாரணையில் அவரது உடையிலிருந்த அடையாளம், மற்ற விபரங்களைச் சோதித்ததில் அவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் என்பது தெரியவந்தது. அம்மாநில போலீஸாரைத் தொடர்பு கொண்டபோது போலீஸாருக்குத் அந்த திடுக்கிடும் தகவல் வெளியானது.

மங்களூரைச் சேர்ந்த முகமது ஷமீர் கடந்த 14-ம் தேதி மனைவி பர்தோஷ் மற்றும்  3 மாதக் குழந்தையுடன் கொடைக்கானலுக்குச் சுற்றுலா வந்ததாகவும் பின்னர் 17-ம் தேதி ஷமீர் காணாமல் போனதாகவும் புகார் வந்துள்ளதாக கர்நாடக போலீஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து மனைவியுடன் சுற்றுலா வந்தவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். அவரது மனைவி என்ன ஆனார் என்பது குறித்து  தேவதானப்பட்டி போலீஸார் விசாரணையில் இறங்கினர்.

அப்போது  பர்தோஷ் தனது கள்ளக் காதலனானா கால் டாக்ஸி ஓட்டுநர் ஆசிப்புடன் தலைமறைவாகிவிட்டதாக தெரியவந்தது. கால் டாக்ஸி ஓட்டுநருடன் செல்லும்போது பர்தோஷ் 60 சவரன் நகையையும் எடுத்துச் சென்றுவிட்டதாகவும் 3 மாத கைக்குழந்தையை விட்டுச் சென்றுவிட்டதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

மங்களூரைச் சேர்ந்த முகமது ஷமீர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி பர்தோஷ் மற்றும் 6 மாத கைக்குழந்தை ஆகியோர் அவரது பெற்றோருடன் பெங்களூரில் வசித்து வந்தார். ஆண்டுக்கு ஒரு முறை ஷமீர் வெளிநாட்டில் இருந்து பெங்களூரு வந்து செல்வார்.

கணவர் வெளிநாட்டில் இருந்தபோது பர்தோஷ்க்கும் டாக்ஸி டிரைவர் ஆசிப் என்பவருக்கும் கள்ளக் காதல்  ஏற்பட்டுள்ளது.

இவர்கள் ஒருவரை ஒருவர் பிரிய மனமில்லாத நிலையில் தங்கள் புதிய உறவுக்கு கணவரும், கைக்குழந்தையும் தடையாக இருப்பதாக இருவரும் கருதியுள்ளனர். இதையடுத்து கணவரைக் கொலை செய்துவிட்டு அதை விபத்தாகக் காண்பித்து ஆசிப்புடன்  சென்றுவிட பர்தோஷ் முடிவு செய்தார்.

இதற்காக ஆசீப்புடன் சேர்ந்து திட்டமிட்டு சுற்றுலா செல்வதுபோல் கடந்த 14-ம் தேதி கணவரை அழைத்துக்கொண்டு கொடைக்கானல் வந்துள்ளார். அங்கு அவரை கழுத்தறுத்து கொன்றுவிட்டு பெங்களூர் தப்பி வந்த அவர்களை தேவதானம்பட்டி போலீசார் ஓசூரில் கைது செய்தனர்

இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கணவரைச் சுற்றுலாவுக்கு அழைத்து வந்து இளநீரில் தூக்கமருந்தைக் கலந்துகொடுத்து அவர் மயங்கிய நிலையில் இருந்தபோது  இருவரும் சேர்ந்து கழுத்தை அறுத்துள்ளனர். பின்னர் அவர் இறந்துவிட்டார் என நினைத்து பின்சீட்டில் அவரை படுக்க வைத்துவிட்டு அங்கேயே உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது குற்றுயிராக இருந்த கணவர் அதைப் பார்த்து முனகியுள்ளார்.

இதையடுத்து அவரின் கழுத்தை மீண்டும் நன்றாக  அறுத்து இறந்துவிட்டாரா என உறுதி செய்த பின்னர் டம்டம் பாறை அருகே வீசி விட்டுச் சென்றதாக இருவரும் தெரிவித்தனர்.

3 மாத குழந்தை பற்றி கவலைப்படாமல், கணவனைக் கழுத்தறுத்துக் கொன்ற பர்தோஷின் செயல் அவரது உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.