திண்டுக்கல் அருகில் உள்ள எரியோடு கோவிலூரை சேர்ந்த மகாமுனி மகன் சிவா . ஓட்டல் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் தோப்புபட்டியில் திருவிழாவிற்கு செல்வதாக தனது வீட்டில் கூறி சென்றார்.

ஆனால் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. நேற்று அதிகாலை வேலாயுதம் பாளையம்- செங்குறிச்சி சாலையில் ஊத்தாங்கரை என்ற இடத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஒரு கார் எரிந்து கொண்டிருந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் சிவாவின் கார் என தெரிய வந்தது. காருக்குள் எலும்புகூடான நிலையில் சிவா உருக்குலைந்து காணப்பட்டார். இதனையடுத்து அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையில் ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி., வேடசந்தூர் ஆர்.டி.ஓ. மற்றும் வடமதுரை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் சிவாவின் பெற்றோர் மற்றும் அவரது நண்பர்களிடம் நடத்திய விசாரணையில் கள்ளக்காதல் பிரச்சினையில் சிவா கொல்லப்பட்டது தெரிய வந்தது. 

சிவாவிற்கும் கோவிலூர் விவேக் என்பவரின் மனைவி அகிலா என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதனை விவேக் கண்டித்தும் சிவா தொடர்ந்து பழகி வந்துள்ளார். இதனால் தனது நண்பர்களுடன் சேர்ந்து சிவாவை கொலை செய்ய திட்டமிட்டார்.

அதன்படி அகிலா மூலம் போன் செய்து சிவாவை கணவாய்மேடு அருகில் உள்ள ஊத்தாங்கரை பகுதிக்கு வரவழைத்தார். அங்கு ஏற்கனவே விவேக் மற்றும் அவரது கூட்டாளிகள் மூன்று பேர் தயாராக இருந்தனர்.


சிவா வந்தவுடன் அவரை 3 பேரும் தாக்கி காருக்குள் தள்ளினர். பின்னர் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். அருகில் உள்ள கிராமத்தில் ஊர் திருவிழா நடந்ததால் மக்கள் நடமாட்டம் எதுவும் இல்லை. இதனை சாதகமாக்கி சிவாவை எரித்து கொன்று விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

ஆனால் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் கள்ளக்காதல் விவகாரம் வெளியானதால் விவேக் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதல் பிரச்சினையில் வாலிபர் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.