கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்று நாடகமாடிய மனைவியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே வீரகனூர் வெள்ளையூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி(46) கட்டிட மேஸ்திரியான இவர் திருச்சிக்கு வேலைக்கு சென்று வந்தார். இவரது மனைவி சகுந்தலா (46). இவர்களுக்கு சின்னதுரை(26) என்ற மகனும், மஞ்சு(23) என்ற மகளும் உள்ளனர்.  இந்நிலையில், கடந்த 11ம் தேதி இரவு 7 மணிக்கு வேலைக்கு சென்றுவிட்டு திரும்பிய சின்னசமி உடல் கருகிய நிலையில் அலறித்துடித்தார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டனர்.

 அப்போது குடும்பத்தகராறில் உடலில் பெட்ரோல் ஊற்றிக் கணவன் தீக்குளித்துவிட்டதாக தெரிவித்தார்.  மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சகுந்தலா தனது கணவன் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றது தெரியவந்தது. 

இதனையடுத்து சகுந்தலாவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர்.  அப்போது, அவர் அளித்த வாக்குமூலத்தில் கெங்கவல்லி அருகே ஆணைப்பட்டி கிராமத்தை சேர்ந்த அந்தோணியுடன் எனக்கு கள்ளத்தொடர்பு இருந்தது. நாங்கள் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்தோம்.  இதையறிந்த எனது கணவர் பலமுறை கண்டித்தார். ஆனால், கள்ளத்தொடர்பை தொடர்ந்ததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 

கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் அவரது குடிப்பழக்கத்தை பயன்படுத்திக்கொண்டு கொலை செய்ய முடிவு செய்தேன். அதன்படி சம்பவத்தன்று பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்துவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினேன் இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறினர். இதனையடுத்து, தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் சகுந்தலாவை கைது செய்து  சிறையில் அடைத்தனர். கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.