7 மாத கர்ப்பிணி பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய கணவர் மற்றும் அவரது கள்ளக் காதலியை போலீசார் திருப்பூரில் கைது செய்தனர்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் அடுத்துள்ளது எருமையூர் பகுதியை சேர்ந்த பிஜூ  கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஐஸ்வர்யா, 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் ஐஸ்வர்யா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி வழக்கு அதிவு செய்து விசாரணை நடத்திய ஆலத்தூர் டி.எஸ்.பி. தேவசியிடம், விசாரணையில் கூடுதல் வரதட்சணை கேட்டு மகளை அடித்து உதைத்து பிஜூ சித்ரவதை செய்ததாகவும், இதனால் மனவேதனை அடைந்த ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது பெற்றோர் கூறினர்.

இதனையடுத்து பிஜூவை தேடியபோது அவர் மாயமாகிவிட்டது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிஜூவுக்கும் அவர் வேலை செய்த இடத்தில் இருந்த மனோசாந்தி  என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளக் காதல் ஏற்பட்டுள்ளது. ஐஸ்வர்யாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்க தூண்டியது கள்ளக்காதலி மனோசாந்தி என்பது தெரியவந்தது.

ஒரு கட்டத்தில் கள்ளக்காதலியே ஐஸ்வர்யாவை தொடர்பு கொண்டு கூடுதல் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்தார். அப்போது தான் கணவருக்கு கள்ளக்காதலி இருப்பது ஐஸ்வர்யாவுக்கு தெரியவந்தது. கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் கள்ளக்காதலி கொடுமைப்படுத்தியதால் ஐஸ்வர்யா கர்ப்பிணி என்றும் பாராமல் விரக்தியடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

தலைமறைவான கள்ளக் காதல் ஜோடியை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தேடினர். அப்போது அவர்கள் பயன்படுத்திய செல்போன் திருப்பூரில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இந்நிலையில் டிஎஸ்பி. தேவசி தலைமையிலான போலீசார், நேற்று திருப்பூர் குமரன் நகருக்கு வந்தனர். அங்கு தலைமறைவாக இருந்த கள்ளக் காதல் ஜோடியை அதிரடியாக கைது செய்து கேரள அழைத்துச் சென்று ஆலத்தூர் கோர்ட்டில் ஒப்படைத்தார். பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர்.