திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கிழக்கு மாரம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் திரவியம். இவருடைய  மனைவி அருள் சத்யா தேவி . இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் திரவியத்தின் அண்ணன் மகன் பீட்டர் என்பவருக்கும் அருள்சத்யாதேவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். 

இதனிடையே பீட்டருக்கு  ராணுவத்தில் வேலை கிடைத்தது. இதையடுத்து பணியில் சேர்ந்த அவர் அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து சித்தியுடன் ஜாலியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு பெண் பார்த்து திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இதற்காக பீட்டர் சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது அருள் சத்யாதேவி தன்னை ஏமாற்றி வேறு பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்று பீட்டரிடம் தகராறு செய்தார்.

எனவே தனது திருமணத்தை எப்படியாவது அருள் சத்யா தேவி நிறுத்தி விடுவார் என பீட்டர் நினைத்தார். எனவே அவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன் படி தனது மோட்டார் சைக்கிளில் அருள் சத்யா தேவியை அழைத்துக் கொண்டு வெள்ளம்பட்டி அருகே உள்ள ஒதுக்குபுறமான பகுதிக்கு வந்தார்.

அவரிடம் நைசாக பேசிக் கொண்டு திருமணத்துக்கு சம்மதிக்குமாறு கூறினார். ஆனால் அவர் என்னை மீறி திருமணம் செய்தால் நாம் இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படங்களை பெண் வீட்டாரிடம் காட்டப்போவதாக மிரட்டினார்.

இதனால் ஆத்திரமடைந்த பீட்டர் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பீட்டருக்கு உதவியாக அவரது தம்பிகள் அந்தோணி , ஸ்டீபன், அவரது நண்பர் சுந்தர் ஆகியோரும் வந்துள்ளனர். அப்பகுதியில் பெண்ணின் சத்தம் கேட்கவே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். 

எனவே பீட்டர் தனது மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு தனது நண்பர்களின் பைக்கில் தப்பி சென்று விட்டார். பொதுமக்கள் சென்று பார்த்த போது பெண் கொலை செய்யப்பட்டு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து வேடசந்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அந்தோணியை கைது செய்தனர். ராணுவ வீரர் பீட்டர் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.