திருவனந்தபுரத்தை அடுத்த நெடுமாங்காடு கருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சு .இவரது  கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். 16 வயதாகும் மஞ்சுவின் மகள் மீரா எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று  நெடுமங்காட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இதற்காக மஞ்சுவும், மீராவும் அந்த பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர். மீரா, வீட்டில் இருந்தபடி தினமும் பள்ளிக்கு சென்று வந்தார். மஞ்சுவின் கணவர் இறந்த பின்பு, கணவரின் நண்பர் அனிஷ்  என்பவர் அடிக்கடி மஞ்சு வீட்டிற்கு வருவார். வீட்டிற்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பார். அடிக்கடி வந்து சென்றதில் மஞ்சுவுக்கும், அனிசுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

வீட்டில் மீரா இல்லாத நேரத்தில் இவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்து வந்தனர். மீரா பள்ளிக்கு செல்லாவிட்டால், கள்ளக்காதலர்கள் சந்திக்க முடியாத நிலை ஏற்படும். இது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

இதையடுத்து கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதால் மீராவை கொலை செய்ய அவரது தாயார் மஞ்சுவும், கள்ளக்காதலன் அனிசும் முடிவு செய்தனர். அதன்படி, கடந்த 10-ந்தேதி இருவரும் சேர்ந்து மீராவின் கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.

பின்னர் பிணத்தை அவர்கள் குடியிருந்த வீட்டில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த பாழும் கிணற்றில் உடலை வீசி விட்டு வந்து விட்டனர். பிணம் நீரில் மிதக்காமல் இருக்க பிணத்துடன் சிமெண்ட் கட்டைகளையும் சேர்த்து கட்டி இருந்தனர்.

மீராவை கொன்று பிணத்தை கிணற்றில் வீசிய பின்பு மஞ்சு, அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அவர்களிடம் மீராவை 10-ந்தேதி முதல் காணவில்லை. அவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் ஓடி விட்டார் என்று கூறியுள்ளார்.

மீராவை தேடி கண்டுபிடிக்க நானும், தமிழகத்திற்கு செல்லலாம் என முடிவு செய்துள்ளேன். 12-ந்தேதி நான், தமிழகம் செல்ல உள்ளேன். அங்கு எப்படியாவது மீராவை தேடி கண்டுபிடித்து அழைத்து வருகிறேன் என்று அவர் தயாரிடம் கூறினார். மறுநாள் முதல் மஞ்சுவையும் காணவில்லை.

மஞ்சுவின் தாயார் வல்சலா, அவர் தமிழகம் சென்றிருப்பார் என்று கருதினார். 2 நாட்களுக்கு பிறகு மஞ்சுவின் செல்போனுக்கு, அவரது தாயார் வல்சலா தொடர்பு கொண்டார். அப்போது மஞ்சுவின் செல்போன் உபயோகத்தில் இல்லை என்று பதில் வந்தது.

மஞ்சு தமிழகத்திற்கு செல்வதாக கூறிய நாள் முதல் அவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற அனிசையும் காணவில்லை. இது வல்சலாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே அவர், இதுபற்றி நெடுமங்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சு, அவரது மகள் மீரா ஆகியோரை தேடினர்.

போலீசார் நடத்திய விசாரணையில், மஞ்சு நாகர்கோவிலில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருப்பது தெரிய வந்தது. அவருடன் அனிஸ் மட்டுமே இருப்பதை அறிந்த போலீசார் மீராவை அவர்கள் என்ன செய்தனர்? என்பதை அறிந்து கொள்ள இருவரையும் பிடித்து வந்து விசாரித்தனர். அப்போதுதான் மஞ்சுவும், அனிசும் சேர்ந்து மீராவை கொன்று பிணத்தை கிணற்றில் வீசிய கொடூர தகவல் தெரியவந்தது. இதையடுத்து மீராவை கொன்று வீசிய கிணற்று பகுதிக்கு சென்று அவரது உடலை மீட்ட போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்..