தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பட்டியை சேர்ந்தவர் இன்பவளவன் திருமணமாகாதவர். இவர் திருப்பூர் சிறுபூலுவப்பட்டியில் தங்கி அதே பகுதியில் கடையை வாடகைக்கு எடுத்து ஒரு மிஷின் வைத்து பின்னலாடை துணிகளை தைத்து கொடுத்து வந்தார்.

 கடந்த சில நாட்களாக இவரது கடை வெளியே பூட்டப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் கடையில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. இது குறித்து அப்பகுதி மக்கள் 15 வேலம்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்தனர். 

கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இன்பவளவன் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்பவளவன் நண்பரான கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் இன்பவளவனை கொலை செய்ததை ஒப்பு கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். 

போலீசாரிடம் அவர் அளித்த வாக்கு மூலத்தில் நானும் இன்பவளவனும் நண்பர்கள். முன்பு ஒரே கம்பெனியில் வேலை பார்த்து வந்தோம். நண்பர் என்ற முறையில் இன்பவளவன் எனது வீட்டிற்கு வருவார். அப்போது எனது மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளத் தொடர்பாக மாறியது. நான் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் நண்பரும் மனைவியும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளளனர்.

இதனை அறிந்த நான் இருவரையும் கண்டித்தேன். இந்த நிலையில் இன்பவளவன் தனியாக டெய்லர் கடை நடத்தி வந்தார். அதன் பின்னரும் எனது மனைவியுடன் செல்போனில் பேசி வந்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. கடந்த 19-ந் தேதி இன்பவளவனை பார்க்க திருப்பூர் வந்தேன். அவரது கடையில் உட்கார்ந்து இருவரும் பேசி கொண்டு இருந்தோம்.

அப்போது இன்பவளவன் எனது மனைவி பற்றி தவறாக பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அங்கிருந்த நாற்காலியை எடுத்து இன்பவளவன் தலையில் ஓங்கி அடித்தேன். இதில் அவர் மயங்கி விழுந்தார். பின்னர் கழுத்தை கயிற்றால் இறுக்கினேன். இதில் அவர் இறந்தார். இதனை தொடர்ந்து இன்பவளவன் உடலை கடைக்குள் வைத்து வெளியே பூட்டி விட்டு சென்று விட்டேன் என்று கூறியுள்ளார்..