வேலூரை அடுத்த  காட்பாடி பாரதி நகரைச் சேர்ந்தவர் சரவணன்.  இவரது மனைவி பவானி. . இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மதுப்பழக்கத்துக்கு அடிமையான சரவணன், குடித்துவிட்டு வந்து அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மே மாதம் 2ஆம் தேதி சரவணன் வீட்டில் தூக்குமாட்டிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து காவல்துறையினர் அவரது மனைவியிடம் விசாரிக்கையில், மது அருந்த பணம் தராததால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார். இந்நிலையில், இன்று சரவணனின் உடற்கூறு ஆய்வில் அவர் கழுத்து நெரித்து கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த காவல் துறையினர்  பவானியைப் பிடித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

அதில், பவானிக்கும்  காட்பாடியைச் சேர்ந்த வேலாயுதம் என்பருக்கும் இடையே கள்ளக் காதல் இருந்து வந்ததாகவும், அவர்கள் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாகவும் தெரிய வந்தது.  இதையறிந்த சரவணன்  குடித்துவிட்டு வந்த இது குறித்து பவானியுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.மனைவியை அடிக்கடி குடித்துவிட்டு கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த வேலாயுதம், பவானியின் உதவியுடன் சரவணனை கொல்லத் திட்டமிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, சரவணன் மே 2ஆம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததை பயன்படுத்திக்கொண்ட வேலாயுதம், பவானி இருவரும் சேர்ந்து அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தூக்கு மாட்டி இறந்ததாக நாடகமாடியுள்ளனர் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து தற்போது பவானி, அவரது நண்பர் வேலாயுதம் ஆகிய இருவரையும் காட்பாடி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.