கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியும், கள்ளக்காதலனும் இணைந்து கணவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம் சீலைப்பிள்ளையார் புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள்மணி(52). இவரது மனைவி திலகவதி (35). இவர்களுக்கு ஈஸ்வரி, கீர்த்தனா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில். காட்டுப்புத்தூரை சேர்ந்த பால்காரர் ராஜா என்பவருக்கும், திலகவதிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இந்த விவகாரம் காலபோக்கில் கணவர் அருள்மணிக்கு தெரியவர மனைவியை கண்டித்துள்ளார். அதனையும் மீறி கள்ளக்காதலர்கள் பழகி வந்தனர். இதனால், அருள்மணியும், திலகவதியும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்து தனித்தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில், சம்பவத்தன்று அருள்மணி குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த திலகவதி கணவரை தீர்த்துக்கட்டுமாறு ராஜாவிடம் கூறியதாக தெரிகிறது. இதனை ராஜா, தனது நண்பர் சிவக்குமாரிடம் தெரிவித்தார். அதன்பேரில் அவர்கள் இருவரும் அருள்மணியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.

அதன்படி, கடந்த 18-ம் தேதி இரவு சிவக்குமார், அருள்மணியை மது அருந்த தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார். மாயனூர் காவிரி ஆற்றங்கரை சுடுகாட்டின் கிழக்கே உள்ள பழைய பரிசல்துறை அருகே அமர்ந்து அருள்மணி, ராஜா, சிவக்குமார் ஆகிய 3 பேரும் மது அருந்தினர். அதனைத்தொடர்ந்து மது போதையில் இருந்த அருள்மணியை அவர்கள் இருவரும் கொலை செய்து ஆற்றில் வீசிவிட்டு சென்று விட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மனைவி கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து,  திலகவதி, ராஜா, சிவக்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.