கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொலை செய்த மருத்துவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கள்ளக்காதலியும் தூக்குப்போட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவைச் சேர்ந்த பல் மருத்துவர் ரேவன்ந்த். இவரது மனைவி கவிதா (31). இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகனும், 7 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் கவிதா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது வீட்டில் இருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனிடையே, கவிதாவின் பெற்றோர், தங்களது மகளை, ரேவந்த் கொலை செய்து இருக்கலாம் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து கவிதாவின் பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு கிடைத்தது. அதில் கத்தியால் கழுத்தை அறுக்கப்படுவதற்கு முன்பு, கவிதாவின் வயிற்றில் 2 மயக்க ஊசி போடப்பட்டு இருந்ததாக கூறப்பட்டு இருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ரேவந்த்தும், பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்த பேஷன் டிசைனரான ஹர்சிதா (32) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். ஹர்சிதா ஏற்கனவே திருமணம் ஆனவர். அப்படி இருந்த போதிலும் இரண்டும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இதுபற்றி அறிந்த மனைவி கவிதா, ரேவந்த்தை கண்டித்து உள்ளார். ஆனாலும், ஹர்சிதாவுடனான கள்ளக்காதலை ரேவந்த் கைவிடவில்லை. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது ஆத்திரம் அடைந்த ரேவந்த் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கவிதாவை தீர்த்து கட்டுவதற்காக அவரது வயிற்றில் ஊசி போட்டு உள்ளார். மயக்கம் அடைந்த கவிதாவின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு, வீட்டில் இருந்த நகைகளையும், 2 குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். நகைக்காக மர்மநபர்கள் கவிதாவை கொலை செய்து இருப்பார்கள் என போலீசாரை நம்பவ வைக்க அவர் நாடகமாடியது தெரியவந்தது.

இதற்கிடையே போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என்று பயந்த ரேவந்த் தலைமறைவாக இருந்த நிலையில் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ரேவந்த் தற்கொலை செய்து கொண்டது செய்தி அறிந்த கள்ளக்காதலி ஹர்சிதா தனது வீட்டில் நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.