கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த ஐகுந்தம் அருகே உள்ள வெப்பாளம் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் .கட்டிட மேஸ்திரியான இவருக்கு திருமணமாகி கஸ்தூரி  என்ற மனைவியும், அரசு, தமிழ் என்ற 2 மகன்களும் உள்ளனர். கோவிந்தராஜின் பெற்றோர்கள் கிட்டம் பட்டியில் வசித்து வருகின்றனர். அவர்களுடன் கோவிந்தராஜின் தம்பி சின்னசாமியும் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கோவிந்தராஜின் மனைவி கஸ்தூரிக்கும், அவரது கொழுந்தன் சின்னசாமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது தெரியவந்தது.

இது குறித்து கேள்விப்பட்ட கோவிந்தராஜ் அவரது மனைவி கஸ்தூரியை பலமுறை கண்டித்துள்ளார். ஆனாலும், அதனை கண்டு கொள்ளாத கஸ்தூரி மீண்டும் சின்னசாமியுடம் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கோவிந்தராஜுக்கும், கஸ்தூரிக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கஸ்தூரியை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து பர்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து . போலீசார் அங்கு விரைந்து சென்று கஸ்தூரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தனது மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கோவிந்தராஜ் போலீசாரிடம் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

அப்போது அவர் போலீசாரிடம், தனது மனைவி கஸ்தூரிக்கும், தம்பி சின்னசாமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து நான் பலமுறை எனது மனைவியை கண்டித்தேன். ஆனால் அவர் எதையும் கேட்கவில்லை.

இந்த நிலையில் நேற்று மீண்டும் எங்களுக்கு தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கஸ்தூரியை சரமாரியாக வெட்டினேன். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

எனது குடும்பத்தை காப்பற்ற எனது தம்பி சின்னசாமி இருப்பான் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவனால் தற்போது எனது குடும்பம் சிதைந்து விட்டது. நான் கொலை செய்துவிட்டு சிறைக்கு சென்றால் தவித்து நிற்கும் எனது குழந்தைகளை இனி யார் காப்பாற்றுவார்கள்? என்று கோவிந்தராஜ் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.