எனது மகளுக்கு  திருட்டுத் தனமாக திருமணம் செய்து வைத்தும், என்னுடைய மனைவி பற்றி அவதூறாக பேசியதாலும் திமுக பிரமுகரை திட்டமிட்டு வாயை வெட்டி, கண்களை தோண்டி கொடூரமாக கொலை செய்தேன் என கைதான  திமுக பிரமுகரை கொன்ற கொலையாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.  

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்து  உள்ள சிறுகளத்தூர் கலெட்டிப்பேட்டை  காந்தி நகரை சேர்ந்த திமுக பிரமுகர் கிரிராஜன் என்பவர் நேற்று முன்தினம் மாலை, ஓடஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.  இந்த வழக்கில், அதே பகுதியை சேர்ந்த முக்கிய குற்றவாளி  4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

அப்போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. விசாரணையில், கைதான பாபு அளித்த வாக்குமூலம் வருமாறு; நான், எனது மனைவி மற்றும் 4 மகள்களுடன் வசித்து வந்தேன். எனது உறவினரான கிரிராஜன் அதே பகுதியில் வசித்து வந்தார். 

ஆரம்பத்தில் நாங்கள் இருவரும் நெருங்கி பழகினோம். ஒன்றாகவே ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தோம். அதில், நல்ல வருமானம் கிடைத்தது. நான் எங்கள் பகுதியில் உள்ள பிரபல ரவுடிகளுடன் நடப்பு ஏற்படுத்திக் கொண்டு கட்டப்பஞ்சாயத்து, அடிதடியில் ஈடுபட்டு வந்தேன். ஆனால், கிரிராஜன் அரசியலில் ஆர்வம் கொண்டு, பொதுமக்களிடம் தனக்கு இருந்த நல்ல பெயரை பயன்படுத்திக் கொண்டு, திமுக சார்பில் ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றார். 

இதையடுத்து, என்னிடம் பழகினால் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுமோ என்று கருதிய கிரிராஜன், என்னிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக தொடங்கினார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.  இந்நிலையில், எனது மூத்த மகள் சவுபாக்கியவதி, கிரிராஜனின் மைத்துனர் மோகன்  என்பவரை காதலித்து வருவது எனக்கு தெரிய வந்தது. இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். 

ஆனால், எனது மகள் வீட்டை விட்டு வெளியேறி காதலன் மோகனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கிரிராஜன் தான் திருமணம் செய்து வைத்துள்ளார். மேலும், அவரது வீட்டிலேயே மணமக்களை தங்க வைத்திருந்தார். இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதனால், மனவுளைச்சலுக்கு ஆளான நான், கிரிராஜனை பழிவாங்க திட்டமிட்டேன். இதனிடையே, என்னை போனில் தொடர்பு கொண்ட கிரிராஜன், "உங்கள் மகளுக்கு செய்ய வேண்டிய நகை, சீர்வரிசையை முறையாக செய்யுங்கள், எனக்கேட்டார். நான், "அவள் என் மகளே இல்லை" என்றேன். அதற்கு கிரிராஜன், "அவள் உனக்கு மகள் இல்லையென்றால், உனது மனைவி அவளை யாருக்கு பெற்றெடுத்தாள்" என்று, என் மனைவி பற்றி ஆபாசமாக கூறினார். 

இதனால் கடும் கோபத்திற்கு ஆளான நான், இதற்கு மேலும் கிரிராஜனை விட்டு வைக்கக்கூடாது என்று முடிவு செய்து, நண்பர்களுடன் திட்டம் தீட்டினேன். அதற்கான சமயம் பார்த்து காத்திருந்தேன். அதன்படி, நேற்று முன்தினம் கிரிராஜனை செல்போனில் தொடர்புகொண்டு, நைசாக பேசி, மகளுக்கான நகை, பணத்தை தருவதாக கூறி அவரை நந்தம்பாக்கம் வரவழைத்து, நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக் கொன்றேன்.

அப்போது, இந்த வாய்தானே என் மனைவியை  அசிங்கமாக பேசியது என்பதால்   வாயிலேயே வெட்டினேன். ஆனாலும், ஆத்திரம் தீராததால், கிரிராஜனின் இரண்டு கண்களையும் தோண்டி எடுத்து  வெறியை தீர்த்துக் கொண்டேன். இவ்வாறு பாபு வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.