ஃபேஸ்புக் நேரலையில் பெண் தற்கொலை: ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்!
ஃபேஸ்புக் நேரலையில் பெண் தற்கொலை செய்து கொண்டது சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கணவன் மற்றும் மாமியார் கொடுத்த மன உளைச்சலை தாங்க முடியாமல் ஃபேஸ்புக் லைவ் நேரலையில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த அதிர்ச்சி சம்பவம் ஹைதராபாத்தின் நாச்சரம் பகுதியில் நடந்துள்ளது.
சனா என்ற 32 வயதான பெண் ஒருவர், தனது கணவருக்குத் திருமணத்தை மீறிய உறவு இருப்பது உட்பட தனக்கு நேர்ந்த கொடுமையை ஃபேஸ்புக் நேரலையில் விவரித்த பின்னர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த காட்சிகள் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சனாவின் பெற்றோர்கள் கூறுகையில், இசை கற்றுத் தரும் ராஜஸ்தானைச் சேர்ந்த ஹேமந்த் படேலுடன் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சனா காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், அந்த தம்பதிக்கு மூன்று வயதில் மகள் ஒருவர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். தம்பதியரின் திருமண வாழ்க்கை ஒரு வருடம் சுமூகமாக இருந்ததாகவும், அதன்பின்னர் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
சனாவின் கணவர் ஹேமந்த் படேல் தன்னிடம் இசை கற்க வந்த ஒரு பெண்ணிடம் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகவும், ஒரு நாள் கையும் களவுமாக அவர்கள் சனாவிடம் மாட்டிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ள அவரது பெற்றோர், அதன்பிறகு தங்களது மகள் சனாவை, ஹேமந்த் படேலும், அந்த பெண்ணும் மனரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
பலாத்கார முயற்சி! இறுதி வரை போராடிய இளம்பெண்! கடுப்பில் ஓடும் ரயிலில் தூக்கி வீசிய கொடூர கும்பல்..
சனா, டெல்லியில் உள்ள ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, வேலையில்லாமல் இருந்த பள்ளித் தோழனான ஹேமந்த் படேலை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது ஹேமந்த் DJ ஆக பணிபுரிந்து வருவதாகவும், DJ வான மற்றொரு பெண்ணுடன் திருமணத்துக்கு மீறிய உறவை ஹேமந்த் கொண்டிருந்ததாகவும் சனாவின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனை பறிமுதல் செய்து, அவரது கணவர் மற்றும் அந்த பெண்ணுடனான உரையாடலை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.