காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்ற தாயை காதலுடன் சேர்ந்து மகளே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஐதராபாத்தில் உள்ள ஹயாத் நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ், லாரி ஓட்டுநரான இவருக்கு ரஞ்சிதா என்ற மனைவியும், கீர்த்தி என்ற மகளும் உள்ளனர். கீர்த்தி தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கீர்த்திக்கு அதே பகுதியைச் சேர்ந்த சஷி எனும் வாலிபரோடு காதல் மலர்ந்துள்ளது. கல்லூரி மாணவர்களான அவர்கள் இருவரும் அடிக்கடி வெளியே சென்று சந்தித்து வந்துள்ளனர்.

இதை அறிந்த கீர்த்தியின் தாய் அவரைக் கண்டித்து சஷியை சந்திக்கக் கூடாது என எச்சரிக்கை செய்துள்ளார். தங்கள் காதலுக்கு இடையூறாக இருந்த கோபமான கீர்த்தி தனது தாயைக் கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். தனது தந்தை வெளியூருக்கு சென்ற நாள் பார்த்து காதலனை வீட்டுக்கு வரவழைத்து கழுத்தை நெறித்து தாயைக் கொலை செய்துள்ளார்.

அதன் பின் 3 நாட்கள் அந்த பிணத்தோடு அதே வீட்டில் வசித்து வந்துள்ளனர். பிணத்தில் இருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்ததும் அந்த உடலை ரயில் தண்டவாளத்திற்கு அருகில் வீசியுள்ளனர். அதன் பின் எதுவும் நடக்காதது போல இருந்துள்ளனர். ஆனால் வெளியூர் சென்ற தந்தை வீட்டுக்கு வந்த போது தனது மனைவியைக் காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இதனிடையே, ரயில் தண்டவாளத்தின் அருகே அழுகிய நிலையில் பெண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தது ரஞ்சிதா என்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் மகள் கீர்த்தி மீது  சந்தேகம் வலுத்தது. அப்போது, போலீசாரின் விசாரணையில் காதலுடன் சேர்ந்து அம்மாவை கொலை செய்ததை கீர்த்தி ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, இருவருரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.