16.8 கோடி பேரின் அந்தரங்க தகவல்களை திருடி விற்ற கும்பல் கைது! ஹைதராபாத் போலீஸ் அதிரடி
நாடு முழுவதும் உள்ள சுமார் 17 கோடி பேரின் அந்தரங்க தகவல்களை இணையம் மூலமாகத் திருடி விற்பனை செய்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையைச் சேர்ந்த பணியாளர்கள் உட்பட நாடு முழுவதும் சுமார் 16.8 கோடி பேரின் தனிப்பட்ட மற்றும் ரகசியத் தகவல்களைத் திருடி விற்பனை செய்துவந்த கும்பலை ஹைதராபாத்தில் உள்ள சைபராபாத் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
தரவு கசிவு காரணமாக உளவு பார்ப்பதற்கும், தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் அபாயம் உள்ளது என்று சைபராபாத் போலீஸ் கமிஷனர் ஸ்டீபன் ரவீந்திரா கூறுகிறார். இந்த கும்பல் திருடப்பட்ட தனிநபர்களின் தரவை 140 வெவ்வேறு வகைகளில் பகிர்ந்துகொள்கின்றன.
மாணவர்கள், தொழிலதிபர்கள், வங்கிப் பயனர்கள், அரசு ஊழியர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள், தனியார் வல்லுநர்கள் ஆகிய பல பிரிவினரின் தரவுகள் திருடப்பட்டுள்ளன. அவை பாலின வாரியாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்று ரவீந்திரா தெரிவிக்கிறார்.
பல்வேறு நிறுவனங்களுடன் பகிரப்படும் குடிமக்களின் தரவுகள் தவறாக பயன்படுத்தப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே டிஜிட்டல் தனிநபர் பாதுகாப்பு மசோதா 2022 நிறைவேற்றப்பட்டது.
Data Mart Infotech, Global Data Arts, MS Digital Grow போன்ற பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத நிறுவனங்களுடன் தொடர்புடைய 6 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த அலுவலகங்கள் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் இருந்து இயக்கிவருகின்றன.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் குமார் நிதிஷ் பூஷன், குமாரி பூஜா பால், சுசீல் தோமர், அதுல் பிரதாப் சிங், முஸ்கன் ஹாசன் மற்றும் சந்தீப் பால் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.பாதுகாப்புப் பணியாளர்களின் விவரங்கள், குடிமக்களின் மொபைல் எண்கள், நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் பற்றிய தகவல்கள், எரிசக்தி மற்றும் மின் துறையைச் சேர்ந்த ஊழியர்கள், பான் கார்டு வைத்திருப்போரின் விவரங்கள் போன்ற முக்கியமான தகவல்களும் திருடப்பட்டு விற்கப்பட்டுள்ளன.
அரசு ஊழியர்கள், டீ-மேட் (D-MAT) கணக்குகள், காப்பீடு, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு வைத்திருப்போரின் தகவல்கள், (Axis, HSBC உள்ளிட்ட பல வங்கிகள்), Whatsapp, Facebook பயனர் விவரங்கள், ஐடி ஊழியர்கள், விமானம் ஓட்டுபவர்கள் குறித்த தகவல்கள் போன்றவற்றை ஜஸ்ட் டயல் (JUST DIAL) மற்றும் அதேபோன்ற தளங்கள் மூலம் விற்பனை செய்துவந்துள்ளனர்.
தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களிடம் இருந்து மூன்று கோடி நபர்களின் தகவல்கள் கசிந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. "பாதுகாப்பு மற்றும் அரசு ஊழியர்களை உளவு பார்ப்பதற்கும், ஆள்மாறாட்டம் செய்வதற்கும், தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் பெரிய குற்றங்களைச் செய்வதற்கு பயன்படுத்தப்படலாம். பான் கார்டுகள் தொடர்பான தரவுகள் கடுமையான குற்றங்களைச் செய்யப் பயன்படும். சைபர் குற்றங்கள் அதிகரிக்கவும் இந்தத் தகவல்கள் பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது." என போலீசார் கூறுகின்றனர்.
இது தொடர்பாக ஜஸ்ட் டயல் நிறுவனத்துக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு விளக்கம் கேட்கப்பட உள்ளதாகத் போலீசார் தெரிவிக்கின்றனர். 50,000 பேரின் தரவுகளுக்கு ரூ.2,000 விலை பெற்றுக்கொண்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன எனவும் தெரியவந்துள்ளது.