நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கோமதி நாயகம். கூலித்தொழிலாளியான இவர் மனைவி முத்துமாரியுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலை முத்துமாரி ரத்தக்காயங்களுடன் சடலமாகக் கிடந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர்.  

பின்னர், மோப்ப நாயைக் கொண்டு சோதனை செய்தபோது அது வெகு தூரம் செல்லாமல் அந்த வீட்டையே சுற்றி வந்தது. இதனால், கணவர்  கோமதி நாயகம் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. கோமதி நாயகத்திடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். 

இதுதொடர்பாக, காவல் துறையினர் கூறுகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு முத்துமாரி ஸ்மார்ட் போன் வேண்டும் கணவரிடம் கேட்டுள்ளார். மனைவியின் மீது இருந்த பாசத்தால் கணவன் செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார். அதில், முத்துமாரி இணையதள சேவையைப் பயன்படுத்தி வந்துள்ளார். இதைப்பார்த்த கோமதி நாயகம் அவரை கண்டித்தும் கேட்காமல், தொடர்ந்து இணையதளத்தை பயன்படுத்தி வந்துள்ளார். இதனால், நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.