மனைவியின் கள்ளக்காதலனின் கையை துண்டித்து அதையே பரிசளித்த கணவனை போலீசார் கைது செய்துள்ளது கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா காலத்திலும் கள்ளக்காதல் விவகாரங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நிகழ்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், பாரதியார் நகர் 4வது தெருவில் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த ஒரு ஆணின் வலது கையை, கடந்த 3ம்தேதி காவல்துறையினர் கைப்பற்றினர். அடுத்தநாள், வலது கை இல்லாமல் ஒரு ஆணின் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தெரிய வந்தது. திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய சுடுகாட்டில் வலது கை இல்லாமல் கிடந்த சடலத்தை கண்டெடுத்தபோது அது, கிருஷ்ணகிரியில் கிடைத்த வலது கைக்கு சொந்தமான உடல் என்று தெரிய வந்தது.

அடுத்தடுத்த விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்ரமணியின் உடல் அது எனத் தெரிய வந்தது. தனது மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த பாலசுப்ரமணி, கொலை செய்யப்பட்டு கிடந்ததால், சம்பவம் குறித்து அவரது மனைவியிடம் விசாரணையைத் தொடங்கினர். அவர் மனைவி கொடுத்த தகவலின் பேரில், பாலசுப்ரமணிக்கு இன்னொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்தது தெரிந்தது.

கள்ளக்காதலியின் கணவனான ராணிப் பேட்டையை சேர்ந்த தமிழரசனைப் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தமிழரசன், அடிக்கடி சிறைக்குப் போவதை வழக்கமாகக் கொண்டிருந்ததால் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவரது மனைவியை பாலசுப்பிரமணி தன் வசப்படுத்தியது தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்த தமிழரசன் பாலசுப்ரமணியை கொலை செய்தது தெரிய வந்தது. 

தமிழரசன் அளித்த வாக்குமூலத்தில், ‘கள்ளக்காதலைக் கைவிடச் சொல்லியும் அதை தன்னுடைய மனைவி கேட்கவில்லை. தான் சிறையில் இருந்த போது தனது மனைவி கர்ப்பமானது தமக்கு ஆத்திரமூட்டியது. இதனால், பாலசுப்பிரமணியை கொலை செய்ய திட்டமிட்டேன்.  கடந்த 3ம்தேதி, பாலசுப்பிரமணியை தேடிப்பிடித்து மது குடிக்க அழைத்து சென்றேன். போதையில் இருந்த நேரம் பார்த்து அவரது வலது கையை துண்டித்து விட்டு கொலை செய்தேன்.
 
கையை ஒரு பையில் வைத்துக் கொண்டு பாரதியார் நகரில் வீட்டில் இருந்த எனது மனைவிக்கு அதையே பரிசாகக் கொடுத்தேன். அடுத்து யாரோடு தொடர்பு வைத்தாலும், இது போலவே கைகளை பரிசாகக் கொடுப்பேன் என்று சொல்லி விட்டு தலைமறைவாகி விட்டேன்”என்று கூறி அதிர வைத்துள்ளார்.