தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே மாரியப்பன் என்பவர் புது வீடு கட்டிக் கொண்டு வருகிறார். வீடு கட்டுவது தாமதமாகவே இது குறித்து அவர் ஜோதிடம் கேட்க  முடிவெடுத்தார். இதனையடுத்து பக்கத்து ஊரில் உள்ள ஜோதிடரை அணுகியுள்ளார். ’’உன்னுடைய மனைவியின் நடத்தை சரியில்லை. அதனால் தான் வீடு கட்டுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது’’எனக் கூறியுள்ளார் ஜோதிடர்.

 

இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பன் நேராக காட்டில் பருத்தி எடுத்துக் கொண்டிருந்த மனைவி காளியம்மாளை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.  கணவர் எதற்காக இப்படிச் செய்கிறார் என தெரியாத மலைவி நிலைகுலைந்து ரத்தம் சொட்டச் சொட்ட மயக்கமடைந்தார். இதனால் படுகாயமடைந்த காளியம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மாரியப்பனிடம் விசாரணை செய்ய அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது மாரியப்பன் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்ய முயன்று கொண்டு இருந்தது தெரியவந்தது. ஜோதிடரின் பேச்சை நம்பி மனைவியை வெட்டி கொலை செய்ய முயன்றதோடு, தானும் தற்கொலை செய்து கொண்ட நபரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.