மனைவி மீது சந்தேகம் கொண்ட கணவர் ஒருவர், கற்பை நிரூபிக்கக் கோரி, மனைவியின் கையை தீயில் வைத்து பொசுக்கிய கொடூர சம்பவம் அரங்கேறி, பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்த ஜெய்வீர் – சுமனி தம்பதிக்கு 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் நடந்ததில் இருந்தே ஒருபுறம் கணவன் சந்தேகம் கொண்டு அடித்து துன்புறுத்த, மற்றொரு புறம் மாமியார் வரதட்சணை கொடுமையை நாளுக்குநாள் அரங்கேற்றியுள்ளார்.

இதனால், கடும் அவஸ்தைப்பட்டு வந்த இளம்பெண் சுமனிக்கு அடுத்து அரங்கேறிய நிகழ்வுகள்தான் அதிர்ச்சியிலும் அதிர்ச்சியை கொடுப்பவை. சுமனி மீது சந்தேகம் கொண்ட கணவன் ஜெய்வீர், அவரை கற்பை நிரூபிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், கற்பை நிரூபிக்க என்ன செய்வதென்று சுமனி தவித்த நிலையில், அவரை பஞ்சாயத்திற்கு கணவன் குடும்பத்தினர் அழைத்துச் சென்றுள்ளனர்.

கணவன் வீட்டாரின் குற்றச்சாட்டுகளை விசாரித்த கிறுக்குப் பிடித்த ஊர் தலைவன் ஒருவன், பெண் கற்புக்கரசியாக இருந்தால், தீயில் கையை வைத்தால் சுடாது என்ற மகாபாரதக் கதையைக் கூறியுள்ளான். இதையடுத்து, அங்கேயே தீமூட்டப்பட்டது. முதலில், பெயரளவுக்கு தனது கையை தீமுன் நீட்டிய கணவன் ஜெய்வீர், அதன்பிறகு மனைவியை தீயை நோக்கி கையை நீட்டுமாறு கூறியுள்ளான்.

சுமனியும் இறைவனை மனதில் நினைத்துக் கொண்டு, கையை தீயை நோக்கி நீட்டிய நேரத்தில், அவரை பாய்ந்து பிடித்த கணவன் மற்றும் அவனது குடும்பத்தினர், நீண்டநேரம் சுமனி கையை தீயில் இருந்து எடுத்துவிடாதவாறு பிடித்துள்ளனர்.

தீ கையை சுட்டுப்பொசுக்கியதால், கதறியழுத சுமனியின் சப்தத்தைக் கேட்டு, கணவனும், மாமியாரும் குரூரமாக மனதிற்குள் சிரித்துள்ளனர். அதை  ஊர்மக்களும் வேடிக்கை பார்த்துள்ளனர். சுமனியின் இரண்டு கைகளும் பொசுங்கிய நிலையில், இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என வெகுண்டெழுந்த அவர், கணவன் மற்றும் மாமியார் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து தலைமறைவான இருவரையும் போலீசார் தேடி வரும் நிலையில், சுமனியின் பொசுங்கிய கை புகைப்படங்களில் சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.