விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலக முன்பு பெண் காவலரின் கணவர் மண்ணென்னெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பெரியார் நகரில் வசிக்கும் சற்குணம் என்பவர் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் கரும்பு ஜுஸ் கடை வைத்துள்ளார். இவருடைய மனைவி தமிழ் சுதா நெய்வேலி டவுன்ஷிப் பகுதி காவல் நிலையத்தில் காவலராகபணிபுரிந்து வருகிறார். ஆகிய இருவருக்கும் இடையே கடந்த ஒன்றரை வருடகாலமாக கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.  

இந்நிலையில், நேற்று மாலை தன்னோடு பணியாற்றும் இரண்டு காவலர்களோடு வந்த சற்குணத்தின் மனைவி தமிழ் சுதா, கரும்பு ஜூஸ் தயார் செய்யும் இயந்திரத்தை எடுத்துச் சென்றுள்ளார். அவரது கணவர் சற்குணம் எவ்வளவு கெஞ்சியும் கேட்காமல் எடுத்து சென்றுள்ளார். இதனால்  விரக்தி அடைந்த சற்குணம் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணையை உடலில் ஊற்றி,  தீக்குளிக்க முயற்சி செய்தார். 

இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து தலையில் தண்ணீரை ஊற்றி அணைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.