எப்போ போன் பண்ணாலும் பிஸி, மேக்கப்பைப் போட்டுக்கிட்டு எப்போ பார்த்தலும் டிக்ட்டாக வீடியோ, குழந்தை அடிபட்டு வீட்டில் கிடக்குது உனக்கு  இது தேவையா? என வெளிநாட்டிலுள்ள கணவன் மனைவியை திட்டியாதால் விஷம் குடிப்பதை டிக் டாக் கில் வீடியோ எடுத்து கணவருக்கு அனுப்பி அவரது உயிரை விட்ட சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சீராநத்தம் கிராமத்தை சேர்ந்த பழனி வேலு மனைவி  அனிதா தம்பதிக்கு மோனிஷா என்ற மகளும், அனீஷ் என்ற மகனும் உள்ளனர். பழனிவேலு சிங்கப்பூரில் வேலை பார்த்து வருவதால் அனிதா தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார். கணவர் அனுப்பும் பணத்தில் பொறுப்பாக குடும்பம்  நடத்தி வந்த அனிதா நாளுக்கு நாள், டிக்-டாக் ஆப் மூலம் வீடியோ எடுப்பது, வீடியோவிற்காக தன்னை மேக்கப் போட்டுக்கொண்டு அழகு படுத்திக்கொள்வதும் என ஆடம்பரமாக இருந்துள்ளார்.

செல்போனில்  எப்போதுமே நேரத்தை செலவிடுவது, குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் சாப்பாடு  கொடுக்காமல் டிக்-டாக் வீடியோவில் மேக்அப் செய்து தன்னை அழகாக காட்டுவது, டான்ஸ் ஆடுவது போன்றவைகளை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அனிதா செய்யும் இந்த டிக் டாக் வீடியோ பற்றி அவரது செயல்பாடு குறித்தும் வெளிநாட்டில் இருக்கும் கணவர் பழனிவேலுவிடம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புகார் தெரிவித்தனர். அவரும் மனைவியை போனில் கண்டித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த மகள் மோனிஷா கீழே விழுந்து காயம் அடைந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாமல் அனிதா இருந்துள்ளார்.

தகவல் அறிந்து ஆத்திரமடைந்த கணவர், எப்போ பார்த்தாலும் மேக்கப் போட்டுக்கொண்டு வீடியோ எடுக்கறது, குழந்தைகளை சரியா கவனிப்பதே இல்லை என அனிதாவை போனில் கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த அனிதா, இனியும் வாழக்கூடாது என தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து, வயலுக்கு அடிக்கும் பூச்சி கொல்லி மருந்தை குடித்த பின்னர் தண்ணீரை குடிக்கிறார். ஒரு சில விநாடிகளில் அவரது கண்கள் மயக்க நிலையை எட்டுகிறது இதை அப்படியே தனது கடைசி விருப்பமாக டிக்-டாக் செயலி மூலம் வீடியோவாக பதிவு செய்து தனது கணவருக்கு அனுப்பியுள்ளார். இதனையடுத்து சில நிமிடங்களில்  மயக்கம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். 

மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அனிதா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.