நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அடுத்து இருக்கும் கோணங்கிபாளையத்தை சேர்ந்தவர் சித்தன். வயது 55. கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஈஸ்வரி வயது 48. இந்த தம்பதியினருக்கு அய்யன்துரை(27), கிருஷ்ணமூர்த்தி(25), முருகன்(23) என்ற மூன்று மகன்கள் உள்ளனர். அய்யன்துரையும் முருகனும் வீட்டில் தறி தொழில் செய்து வருகின்றனர். கிருஷ்ணமூர்த்தி காகாபாளையத்தில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியன் ஆக பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் சித்தன் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் பட்டதாக தெரிகிறது. தினமும் குடித்துவிட்டு வரும் அவர் இது குறித்து ஈஸ்வரியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். யார் யாரிடம் போனில் பேசுகிறாய் என்று கேட்டு அடிக்கடி அடித்து உதைத்துள்ளார். அத்துடன் மேலும் குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்வார் என்றும் கூறப்படுகிறது. 

சம்பவத்தன்று அதிகமாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார் சித்தன். அப்போது கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு இருக்கிறது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சித்தன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ஈஸ்வரியை சரமாரியாக வெட்டி இருக்கிறார். இதில் படுகாயமடைந்த ஈஸ்வரி ரத்தவெள்ளத்தில் சரிந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு மகன்கள் மற்றும் உறவினர்கள் ஓடி வந்துள்ளனர். அதற்குள்ளாக சித்தன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

பின்னர் சித்தனை தேடி உறவினர்கள் சென்றபோது வீட்டின் பின்பகுதியில் இருக்கும் சோளக்காட்டில் விஷமருந்தி தற்கொலை செய்து இறந்து கிடந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த மல்லமூப்பம்பட்டி காவல்துறையினர் 2 பேரின் உடல்களையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை அரிவாளால் வெட்டி விட்டு கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.