ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கணவனை மனைவியே கயிற்றால் கழுத்தை நெறித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவரது மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வத்திராயிருப்பைச் சேர்ந்த ஆறுமுகம் - பாண்டீஸ்வரி தம்பதி. இவர்களுக்கு அடுத்தடுத்த இரு வீடுகள் சொந்தமானவை என்ற நிலையில் இவர்கள் வசித்த வீடு கடந்த 3 நாட்களாக பூட்டப்பட்டுக் கிடந்ததோடு, பாண்டீஸ்வரி குழந்தைகளுடன் பக்கத்து வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் பூட்டிய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி தொடங்கியது. இது தொடர்பாக அக்கம்பக்கத்தினர் பாண்டீஸ்வரி விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினார். 

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் பூட்டப்பட்ட வீட்டை திறந்து பார்த்த போது ஆறுமுகத்தின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆறுமுகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக போலீசார் பாண்டீஸ்வரியிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து தனது கணவன் தன்னை குடித்துவிட்டு துன்புறுத்தி வந்ததால் கயிற்றால் கழுத்தை நெறித்துக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து பாண்டீஸ்வரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.