நாகர்கோவிலில் கணவனை கூலிப்படை ஏவி கொலை செய்ய மனைவி ரூ.2 லட்சம் விலை பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மனைவியிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. 

நாகர்கோவில் வடசேரி கேசவதிருப்பாபுரத்தை சேர்ந்தவர் கணேஷ் (38). போட்டோகிராபர். இவரது மனைவி காயத்ரி (35). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கணேஷ், தனது மனைவி, மகனுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது, பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல் வீடு புகுந்து கணேஷை சரமாரியாக தாக்கி விட்டு தப்பித்து சென்றனர். பின்னர், வீட்டில் மற்றொரு அறையில் தூங்கிய மனைவி காயத்ரி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனையடுத்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த கணேசை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, பூட்டிய வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்தது எப்படி? என போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதனையடுத்து, கணேசன் மனைவியிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது, கள்ளக்காதலனுடன் சேர்ந்து 2 லட்சத்திற்கு கூலிப்படையை ஏவி கணவரை தீர்த்துக்கட்ட முயன்ற திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுதொடர்பாக காயத்ரி மற்றும் கூலிப்படை விஜயகுமார்(45), கருணாகரன் (46) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

பின்னர், காயத்ரியிடம் நடந்த விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: காயத்ரிக்கும், மதுரையில் உள்ள ஒரு வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது.  அதாவது, ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தவர், மழலையர் பள்ளியை தொடங்கிய போது காயத்ரி அங்கு வேலைக்கு சென்றார். அப்போது அவர்களுக்கிடையே நெருக்கம் அதிகமாகி உள்ளது. கள்ளக்காதலனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் மனநிலைக்கு காயத்ரி வந்துவிட்டார். இவர் தொழில் மேம்பாட்டுக்காக, காயத்ரி தனது கணவரின் பெயரில் இருந்த வீட்டை அடகு வைத்து 10 லட்சம்  கொடுத்தார்.

இதில், சந்தேகப்பட்ட கணவரை காதலன் மற்றும் கூலிப்படை உதவியோடு  கொல்ல திட்டமிட் டுள்ளார். சம்பவத்தன்று நள்ளிரவு வீட்டின் கதவை காயத்ரி திறந்து வைத்திருக்க, கணேசை கம்பியால் தாக்கிவிட்டு கூலிப்படையினர் தப்பி உள்ளனர். பின்னர் லைட்டை போட்டு பார்த்தபோது கணேஷ் இறக்கவில்லை என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த காயத்ரி, கள்ளக்காதலனுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதிகாலை வரை காத்திருந்தும் கணேஷ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கொண்டு இருந்ததால்  யாரோ தாக்கியதாக காயத்ரி கூச்சலிட்டு நாடகமாடி உள்ளார். மேலும், தலைமறைவாக உள்ள கள்ளக்காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.