ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே சத்திய நாராயணபுரம் ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி கிராந்தி. இவருக்கும் பிரதீப் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

இந்நிலையில், மனைவியிடம் இருந்து விவாகரத்துக் கோரி பிரதீப் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் மணி கிராந்தி விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடைபெற்று வந்துள்ளது. 

இந்நிலையில் நேற்று மதியம் மணி கிராந்தி கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.அவரை பின் தொடர்ந்து வந்த பிரதீப், வீட்டருகே வந்ததும் விவாகரத்து குறித்து பேச வேண்டும் எனக் கூறியுள்ளார். 

ஆனால், பிரதீப்பை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்த மணி கிராந்தி வெளியில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மணி கிராந்தியை சரமாரியாக வெட்டியதால் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதையடுத்து, மணி கிராந்தியின் தலையை துண்டித்து எடுத்த பிரதீப், தெருவில் நடந்து சென்றதால் பொதுமக்கள் அச்சத்தில் கதவுகளைப் பூட்டிக் கொண்டு உள்ளே சென்றனர். பலர் அலறியடித்து ஓடினர். இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி ஒன்றில் பதிவாகி இருந்தது.

மனைவியின் தலையை தூக்கிக் கொண்டு ஓடிய பிரதீப், கால்வாய் ஒன்றில் வீசிவிட்டு, போலீசில் சரண் அடைந்தார். இதையடுத்து மணி கிராந்தியின் உடலையும், கால்வாயில் தூக்கி வீசப்பட்ட தலையையும் கைப்பற்றிய போலீசார், கொலைக்கான காரணம் குறித்து பிரதீப்பிடம் விசாரித்து வருகின்றனர்.