கள்ளக்காதல் தகராறில் மனைவியை கொன்று நாடகமாடிய வியாபாரி கைது செய்யப்பட்டார். கள்ளத் தொடர்பால் மனைவியை கொன்ற கணவர் சிறைக்கு சென்று விட்டார்.  

திண்டுக்கல் அருகே உள்ள காமலாபுரத்தைச் சேர்ந்தவர் ஜான் ஜோசப், மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கிரேசி மேரி, இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிரேசி மேரி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து தகவலறிந்த அம்மைய நாயக்கனூர் போலீசார் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.இதனைத் தொடர்ந்து கிரேசி மேரியின் தந்தை ஜேசுராஜ் புகார் அளித்தார். அந்த புகாரில் தனது மகள் சாவில் மர்மம் உள்ளது, என குறிப்பிட்டு இருந்தார். இதனையடுத்து வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில் கிரேசியின் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த கொலையில் அவரது கணவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் நிலக்கோட்டை டி.எஸ்.பி. பாலகுமார் தலைமையில் அம்மைய நாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் ஜான் ஜோசப் தனது மனைவியை கொலை செய்ததை ஒத்துக் கொண்டார்.

இதுகுறித்து அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில்;  கிரேசி மேரிக்கும் எனது உறவினர் ஒருவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது. இவர்களது உறவை நான் பல முறை கண்டித்து வந்தேன். ஆனால், என் மனைவி என்னுடைய பேச்சை கேட்கவில்லை. இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்தேன், இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிரேசி மேரி அந்த வாலிபருடன் பேசி வந்தார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் நான் அவரை அடித்து கீழே தள்ளி விட்டேன். இதில் அவர் மயக்கமடைந்து விழுந்தார். 

பின்னர் அருகில் இருந்த சேலையை எடுத்து கிரேசி மேரியின் கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டு, வழக்கம் போல எனது மளிகை கடைக்கு வந்து விட்டேன். ஆனால், எனது உறவினர்கள் மற்றும் மாமனார் சாவில் மர்மம் உள்ளதாக சந்தேகப்பட்டு போலீசில் புகார் அளித்துவிட்டார். போலீசார் நான் கொலை செய்ததை கண்டு பிடித்து விட்டனர் என்று தெரிவித்தார். இதனையடுத்து ஜான் ஜோசப்பை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.