மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து கணவர் அவரை கத்தியால் கொடூரமாக குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்த வித்யா  என்ற பெண் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் திருவனந்தபுரத்தில் வசித்து வந்தார். இதற்கிடையில், வித்யாவின் கணவர் தனது நிதி நெருக்கடியை சமாளிக்க பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இதனால், குடும்ப கடனை சமாளிக்க அதிக அளவில் இருந்ததால் கணவன் மனைவி இடையே பல மாசமாக பிரச்சனை இருந்து வந்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு தனது கணவர் தன்னை துன்புறுத்துவதாக வித்யா போலீசில் புகார் அளித்தார். 

இதையடுத்து, இருவருக்கும் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே சிறிது காலம் பிரச்சனைகள் எதுவும் நிகழாமல் இருந்தது. இதைதொடர்ந்து, குடும்ப கடன் சுமை காரணமாக தனது 2 பெண் குழந்தைகளையும் கேரளாவில் உள்ள தனது பெற்றோரிடம் விட்டுவிட்டு வெளிநாட்டில் வேலை செய்வதற்காக தனது கணவருடன் இணைந்து வித்யா துபாய்க்கு சென்றார்,  துபாயில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். 

இந்நிலையில், துபாயின் அல் கோஸ் என்ற பகுதியில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் கடந்த திங்கள்கிழமை வித்யாவும் அவரது கணவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு வித்யாவை சரமாரியாக குத்தினார். இந்த கொடூர மாக குத்தப்பட்டதில் வித்யா சம்பவ இடத்திலேயை ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார். இதையடுத்து வித்யாவை கொலை செய்த அவரது கணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த வித்யாவின் தம்பி வினயச்சந்திரன் இது குறித்து கூறுகையில்; 'எனது அக்கா ஓணம் கொண்டாட்டத்தில், பங்கேற்பதற்காக துபாயில் இருந்த நேற்றே கேரளா வந்திருக்க வேண்டும். அவரும் தனது குழந்தைகளை பார்க்கவும் மிகுந்த ஆவலாக இருந்தார். ஆனால், தற்போது எனது அக்கா உயிரிழந்துவிட்டார் என்ற செய்தியை எங்கள் குடும்பத்தால் நம்ப முடியவில்லை என அழுதுகொண்டே கூறியுள்ளார்.