அடிக்கடி குடித்து தாக்கியதாலும், நடத்தையில் சந்தேகப்பட்டதாலும் கணவரை கொடூரமாக  கொலை செய்ததாக மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

திருவண்ணாமலை  மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(40) இவரது மனைவி ஈஸ்வரி (35). இவர்களுக்கு 18 வயது, 16 வயதில் மகன்கள் உள்ளனர். கடலாடியில் தற்போது புதிய சார்பதிவாளர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிக்கான சிமெண்ட் மூட்டைகள். கம்பிகள் ஆகியவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் ஆறுமுகம் இரவு காவலராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை அங்குள்ள ஆடுதின்னான் ஏரியில் தலை மற்றும் கழுத்தில் படுகாயத்துடன் ஆறுமுகம் சடலமாக கிடந்தார்.

இதுகுறித்து உடனே  கடலாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, கட்டுமான பொருட்களை திருட வந்த கும்பல் இவரை தாக்கி கொலை செய்திருக்கலாம் என சந்தேகமடைந்தனர். கொலையாளிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். 

இந்நிலையில், ஆறுமுகத்தின் மனைவி ஈஸ்வரியிடம் சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரித்தனர். இதில் கணவரை அடித்துக் கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டார். அவரை கடலாடி போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில் குறித்து போலீசார் கூறியதாவது;- ஆறுமுகத்துக்கு மது மற்றம் சீட்டு விளையாடும் பழக்கம் இருந்தது. இது தவிர அடிக்கடி மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரிடம் தகராறு செய்து வந்துள்ளார். 

இதனால் கொடுமை தாங்க முடியாமல் கணவரை கொலை செய்ய ஈஸ்வரி திட்டமிட்டார். அதன்படி கணவர் வைத்திருந்த மதுபானத்தில் ரகசியமாக தூக்க மாத்திரைகளை கலந்துள்ளார். இதை குடித்துவிட்டு பணியில் இருந்த போது மயங்கியுள்ளார். இதையறிந்த ஈஸ்வரி அங்கு கணவர் இயற்கை உபாதை கழிக்க கைத்தாங்கலாக ஏரி பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு தலைமீது கட்டை மற்றும் கல்லால் சரமாரியாக தாக்கியுள்ளார். இருப்பினும் உயிர் போகாததால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். இதனையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.