திருவள்ளூரை அடுத்த திருநின்றவூர்  கொட்டாம்பேடு கொசவன்பாளையம் ஆற்றங்கரையில் கடந்த 16-ந்தேதி அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது. இதனை கைப்பற்றிய போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் பிணமாக கிடந்தது விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தைச் சேர்ந்த குமார் என்பதும் கள்ளக்காதல் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.. இது தொடர்பாக குமாரின் மனைவி செல்வி, அவரது கள்ளக்காதலன் மணிகண்டன், கூட்டாளிகள் அய்யனார், பூமிநாதன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.இகு குறித்து செல்வியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கொலை செய்யப்பட்ட குமாரின் மனைவி செல்விக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டனுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. மணிகண்டன் திருநின்றவூரில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். இதனை அறிந்த  குமார் மனைவியை கண்டித்தார். ஆனாலும் செல்வி கள்ளக்காதலை கைவிடாமல் இருந்தார்.

இதற்கிடையே குமாருக்கு கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளி வேலை கிடைத்தது. இதனால் கடந்த 2 மாதத்துக்கு முன்பு அவர் குடும்பத்துடன் கூடுவாஞ்சேரிக்கு இடம் பெயர்ந்தார். இதனை அறிந்த மணிகண்டன் அடிக்கடி செல்வியை சந்தித்து கள்ளக்காதலை வளர்த்து வந்தார். மணிகண்டன் மீண்டும் தனது மனைவியுடன் தொடர்பு வைத்திருப்பதை அறிந்த குமார்  மீண்டும் மனைவியை கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து கணவன் உயிரோடு இருந்தால் கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருக்க முடியாது என்று நினைத்த செல்வி கணவரை கொலை செய்ய முடிவு செய்தார். இதற்கு கள்ளக்காதலன் மணிகண்டனும் ஒப்புக்கொண்டார்.


இதையடுத்து கடந்த 10-ந்தேதி இரவு குமாருடன் பாசமாக இருப்பது போல் செல்வி நடித்து பாயாசம் தயாரித்து கொடுத்தார். அதில் தூக்க மாத்திரை கலந்து இருந்தார். இதனை அறியாத குமார் பாயாசம் குடித்த சிறிது நேரத்தில் மயங்கினார். இதுபற்றி செல்வி கள்ளக்காதலனுக்கு தெரிவித்தார்.

அப்பகுதியில் தயாராக நின்ற மணிகண்டன், தனது கூட்டாளிகளான உடன் வேலை பார்க்கும் அய்யனார், பூமிநாதன் ஆகியோருடன் குமாரின் வீட்டுக்குச் சென்றனர். அவர்கள் கயிற்றால் இறுக்கி குமாரை கொலை செய்தனர்.


பின்னர் குமாரின் உடலை மோட்டார் சைக்கிளில் எடுத்து திருநின்றவூர் கொசவன்பாளையம் ஆற்றில் புதைத்து தப்பி சென்று விட்டனர். பதட்டத்தில் உடல் அறை குறையாக புதைக்கப்பட்டதால் நாய்கள் வெளியே இழுத்தன. இதனால் துர்நாற்றம் வீசி உடல் வெளியே தெரிந்துவிட்டது. தற்போது செல்வி உட்பட 4 பேரும் கம்பி எண்ணிக் கொண்டிருக்கினறனர்.