விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகே இருக்கிறது சுதாகர் நகர். இந்த பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். ஓய்வு பெற்ற ஆசிரியரான நடராஜனுக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். அதில் முதல் மனைவி இந்திரா விழுப்புரத்தில் வசிக்கிறார். இரண்டாம் மனைவி திருக்கோவிலூரில் வசித்து வருகிறார். நடராஜன்- இந்திரா தம்பதியினருக்கு ஒரு மகன் இருந்துள்ளான். கோவையில் இருக்கும் ஒரு கல்லூரியில் படித்து வந்த அவர், சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்துள்ளார்.

அதன்பிறகு நடராஜன் முதல் மனைவியுடன் விழுப்புரத்தில் வசித்து வந்திருக்கிறார். அவ்வப்போது திருக்கோவிலூர் சென்று இரண்டாம் மனைவியை பார்த்து வருவார் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் திங்கள்கிழமை காலையில் வீட்டில் இந்திரா கொல்லப்பட்டு கிடப்பதாக நடராஜன் கூச்சல் போட்டுள்ளார். இந்திராவின் உடல் ஒரு பகுதி எரிக்கப்பட்ட நிலையில் ரத்த காயங்களுடன் இருந்தது. 

சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள், இந்திராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த விழுப்புரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். நடராஜன் மீது சந்தேகம் கொண்ட காவலர்கள் அவரிடம் கிடுக்குபிடி கேள்விகளுடன் விசாரணை செய்தனர். அதில் நடராஜன் தான் இந்திராவை கொலை செய்தது தெரிய வந்தது.

5ம் தேதி இரவு வீட்டிற்கு வந்த நடராஜனுக்கும் இந்திராவிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இந்திராவின் தலையில் இரும்பு கம்பியால் நடராஜன் தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்து விழுந்த அவர்மீது பழைய துணிகளை போட்டு தீவைத்து எரித்திருக்கிறார். திருட்டு சம்பவம் போல தெரிய வேண்டும் என்பதற்காக வீட்டில் இருந்த 8 சவரன் நகையையும் எடுத்து மறைத்து வைத்து நாடகமாடியிருக்கிறார். நடராஜன் மீது வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.