ஆற்காடு அருகே கணவர் மற்றும் குழந்தையை கொலை செய்து புதைத்த காதல் மனைவி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

வேலூர் மாவட்டம், திமிரி அடுத்த பாடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி நிர்மலா. இவர்களது மகன் ராஜா (25) எலக்ட்ரீஷியன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ராஜா, சாத்தூர் மந்தைவெளி தெருவை சேர்ந்த பெருமாள், விஜய் தம்பதியரின் மகள் தீபிகா(19) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரவீன்குமார் (1) என்ற மகன் உள்ளான். கடந்த 13-ம் தேதி முதல் ராஜாவும், பிரவீன்குமாரும் காணாமல் போனார்கள். இதுகுறித்து தீபிகா அங்குள்ளவர்களிடம் கூறி உள்ளார். இந்த தகவல் ராஜாவின் சகோதரிகளுக்கு தெரியவந்தது. உடனே ராஜா வீட்டுக்கு வந்து தீபிகாவிடம் விசாரித்தனர். வீட்டில் ரத்தக்கறை போல இருக்கிறதே என கேட்டுள்ளனர். 

அதற்கு தீபிகா முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். இதனையடுத்து அவரது சகோதரர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீபிகாவிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. கணவர் ராஜா குடித்துவிட்டு அடிக்கடி என்னிடம் தகராறு ஈடுபட்டார். 

இதனால் விரக்தி அடைந்த நான் கடந்த 12-ம் தேதி இரவு கணவர் தூங்கும்போது கணவனின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்துள்ளார். அந்த சத்தம் கேட்டு குழந்தை எழுந்து அழுதுள்ளது. கணவரை கொலை செய்தது போலீசில் தெரிந்தால், தான் ஜெயிலுக்கு செல்ல நேரிடும். இதனால், தனது குழந்தையை கொலைக்காரியின் மகன் எனக்கூறுவார்கள் என்று கருதி தனது குழந்தையை துப்பட்டாவால் கழுத்து நெரித்து கொலை செய்து உள்ளார். பின்னர் சடலங்களை வீட்டின் அருகே புதைத்துள்ளார். அதன்பிறகு எதுவும் தெரியாததுபோல் தீபிகா அந்த வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும் கணவரின் மீதான ஆத்திரத்தில் ஆடைகள் மற்றும் ஆதார் கார்டு, பேங்க் பாஸ்புக் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை தீபிகா எரித்துள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். 

ஆனால் வீட்டில் இருந்து 30 அடி தூரத்தில் பிணங்கள் புதைக்கப்பட்டுள்ளன. தனியாக தீபிகா இதனை செய்ய முடியாது. மேலும் புதைக்கப்பட்ட பள்ளம் ஏற்கனவே தோண்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சம்பவத்தில் தீபிகாவுக்கு யாரோ உடந்தையாக இருந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.