கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா எல்லேமாலா கிராமத்தை சேர்ந்தவர் முத்துராஜ் என்பவரும்  கே.வி.எம்.தொட்டியை சேர்ந்தவர் ஜோதி என்பவரும் கடந்த  3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இவர்களின் காதல் விவகாரம் ஜோதியின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. முத்துராஜ் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் ஜோதியின் குடும்பத்தினர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் ஜோதி தனது காதலில் உறுதியாக இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜோதி வீட்டைவிட்டு வெளியேறி, முத்துராஜை திருமணம் செய்து கொண்டு பெங்களூருவில் வசித்து வந்தார். இதற்கிடையே ஜோதி கர்ப்பமானார். இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி முத்துராஜிம், ஜோதியும் எல்லேமாலா கிராமத்திற்கு வந்தனர்.

இதையடுத்த  நேற்று முன்தினம் முத்துராஜிம், அவரது பெற்றோரும் வீட்டைவிட்டு வெளியே சென்று இருந்தனர். ஜோதி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதுபற்றி அறிந்ததும் ஜோதியின் தந்தை கிருஷ்ணய்யா, தாய் வெங்கடலட்சுமம்மா, தாத்தா கோவிந்தய்யா, பாட்டி திருமம்மா, வெங்கடலட்சுமம்மாவின் தம்பி கைவாஸ் ஆகியோர் முத்துராஜின் வீட்டிற்கு சென்று ஜோதியிடம் தகராறு செய்தனர். மேலும் அவரை வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக இழுத்து காரில் ஏற்றி கடத்தி சென்றனர்.

இதைத் தொடர்ந்து  ஜோதியை கொள்ளேகால் தாலுகா சிவனசமுத்திரா பகுதியில் ஓடும் கால்வாய் அருகே அழைத்து சென்றதுடன், அவரது கழுத்தை துண்டால் இறுக்கி கொலை செய்தனர்.

மேலும் அவரது உடலை கால்வாயில் வீசிவிட்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து தகவல்  அறிந்த கொள்ளேகால் புறநகர் போலீசார் அங்கு சென்று ஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர்  முத்துராஜ் அளித்த புகாரின்பேரில் கொள்ளேகால் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 5 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

வேறு சாதி வாலிபரை திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் கர்ப்பிணி பெண்ணை கொன்று உடலை கால்வாயில் வீசிய சம்பவம் கொள்ளேகாலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது