சாத்தூரில் 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட அதிர்ச்சியே விலகாத நிலையில் அடுத்த அதிர்ச்சியை கிளப்பினார் சென்னையை சேர்ந்த ஒரு கர்ப்பிணிப்பெண். அடுத்து 14 வயது சிறுமிக்கும் ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டது தமிழகத்தை அதிர வைத்துள்ளது.  

விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் 8 மாத கர்ப்பிணி மனைவிக்கு அரசு மருத்துவமனையில்  ஹெச்.ஐ.வி செலுத்தப்பட்டது தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த கர்ப்பிணி பெண்ணையும், கருவில் இருக்கும் குழந்தையை மீட்க உயர் ரக சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அடுத்து சென்னை, மாங்காடு பகுதியைச் சேர்ந்த அந்த கர்ப்பிணி பெண் குழந்தை பெறுவதற்காக சென்னை, மாங்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது ஏப்ரல் 5-ம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் செலுத்தப்பட்ட 2 யூனிட் ரத்தத்தில் ஹெச்.ஐ.வி செலுத்தப்பட்டதாக பகீர் கிளப்பினார். அடுத்தடுத்து கிளம்பிய புகார்கள் தமிழக சுகாதாரத்துறையின் அவல நிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இதுபோன்ற மற்றொரு நிகழ்வு நடைபெறாது என சுகாதரத் துறை உறுதியளித்து வந்த நிலையில் இதே போன்று மற்றொரு சம்பவம் அரங்கேறி மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே 14 வயது சிறுமிக்கும் ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தமிழகத்தை அதிர வைத்துள்ளது. அந்தச் சிறுமியின் உடலில் அடிக்கடி புண் வெடித்ததால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். 2009ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் தேதி அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பிறகு தொடர்ந்து அந்தச் சிறுமியின் மூக்கில் இருந்து தொடர்ந்து ரத்தம் வடிந்துள்ளது. பின்னர் நடத்திய பரிசோதனையில் சிறுமிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தியது தெரிய வந்ததுள்ளது. அடுத்தடுத்து ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டதாக வரும் புகார்கள் தமிழகத்தை பீதியில் ஆழ்த்தியுள்ளது.