சென்னையில் மகளிர் விடுதியில் ரகசிய கேமராக்களை வைத்து பெண்களை வீடியோ எடுத்த பரபரப்பு அடங்குவதற்குள் தனியார் மருத்துவமனையில் நர்ஸ்கள், பெண்கள் உடைமாற்றுவதை ரகசியமாக வீடியோ எடுத்து அதிரவைத்திருக்கிறார் துப்ப்ரவு பணியாளர் ஒருவர். 

சென்னை, சைதாப்பேட்டையில் இயங்கி வருகிறது அந்த தனியார் மருத்துவமனை. இங்கு செவிலியர்கள், மருத்துவம் பார்க்க வரும் பெண்களுக்கு என தனியாக உடை மாற்றும் அறை ஒன்று உள்ளது. இந்த அறைக்கு பெண்களை தவிர மற்ற யாரும் செல்ல அனுமதி இல்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் மருத்துவமனையில் துப்புரவு பணி செய்து வரும் எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த சிவபிரகாஷுடன் துப்புரவு பணி செய்து வரும் சைதாப்பேட்டையை சேர்ந்த அமல்ராஜ் என்பவரும் மருத்துவமனையிலேயே தனது செல்போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்தனர். 

அப்போது, மருத்துவமனையின் பெண் மேலாளர் மருத்துவமனையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். துப்புரவு தொழிலாளர்கள் இருவரும் பெண்கள் உடை மாற்றும் அறையில் இருந்ததை பார்த்து சந்தேகித்துள்ளார். பின்னர் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தியபோதுனார். முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். சிவபிரகாஷ் கையில் இருந்த செல்போனை வாங்கி பார்த்த போது மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் அறையில் உடை மாற்றும் காட்சிகள் வீடியோவாக இருந்ததை கண்டு  பெண் மேலாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். இருவரின் செல்போனையும் வாங்கி ஆய்வு செய்த போது 30க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பெண்களின் உடை மாற்றும் காட்சிகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இருந்தன. பின்னர் இருவரையும் பிடித்து மருத்துவமனையில் வைத்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.

தொடர்ந்து, மருத்துவமனை பெண் மேலாளர் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் துப்புரவு தொழிலாளர்கள் சிவபிரகாஷ் மற்றும் அமல்ராஜ் ஆகியோர் மீது புகார் அளித்தார். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து துப்புரவு தொழிலாளர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும், உடை மாற்றும் அறையில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமரா மற்றும் இரண்டு செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், ’’சிவபிரகாஷ் உடை மாற்றும் அறையில் துப்புரவு பணிக்காக உள்ளே சென்ற போது யாரும் கண்டுபிடிக்க முடியாத இடத்தை தேர்வு செய்து கேமரா அமைத்துள்ளார். காலை மற்றும் இரவு நேரம் பணிக்கு வரும் செவிலியர்கள் உடை மாற்றும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த படங்களை இரவு பணியின் போது யாருக்கும் தெரியாமல் தனது செல்போனில் பதிவேற்றம் செய்து வந்துள்ளார். அப்படி பதிவு செய்த வீடியோ காட்சிகளை சம்பந்தப்பட்ட பெண்ணிடம் பேசுவது போல், புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை காட்டி பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்து விடுவேன் என்று கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சில பெண்கள் பயத்தில் சிவபிரகாஷ் கேட்ட பணத்தை கொடுத்துள்ளனர்.

பணம் கொடுக்க முடியாத பெண்களை சிவபிரகாஷ் தொந்தரவு செய்து ஆசைக்கு இணங்க செய்துள்ளார். சிவபிரகாஷ் ஆபாச வீடியோக்களை வாட்ஸ் அப் மூலம் தனது நண்பர்களுக்கும் அனுப்பி உள்ளார். பிறகு நண்பர்கள் மூலமும் அவர் பணம் கேட்டு மிரட்டியும் வந்துள்ளார். இதுபோல் கடந்து 2 மாதங்களாக சிவபிரகாஷ் சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். 

இதுகுறித்து கேள்விப்பட்டதும் உடன் பணியாற்றும் அமல்ராஜ் அந்த வீடியோக்களை எனக்கு அனுப்ப வில்லை என்றால் இந்த விஷயம் குறித்து வெளியில் சொல்லிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். பிறகு சிவபிரகாஷ் தனது செல்போனில் இருந்து அமல்ராஜ் செல்போனுக்கு வீடியோக்களை அனுப்பும் போது மருத்துவமனை மேலாளரிடம் கையும் களவுமாக சிக்கி கொண்டார்’’ எனக் கூறியுள்ளனர். மருத்துவமனையில் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.