கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே இருக்கிறது காட்டம்பட்டி கிராமம். இங்கு அரசு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமையாசிரியராக மாகாளியப்பன் என்பவர் பணியாற்றி வருகிறார். 

இந்தநிலையில் இங்கு பயிலும் மாணவிகள் சிலர், மாகாளியப்பன் தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக பெற்றோரிடம் கூறியுள்ளனர். அதிர்ச்சியடைந்த அவர்கள் மற்ற மாணவிகளின் பெற்றோரிடம் இதுகுறித்து விசாரித்துள்ளனர். அப்போது 4 மற்றும் 5 ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 11 பேரிடம் மாகாளியப்பன் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அனைவரும் சேர்ந்து பேசியதில் தலைமையாசிரியர் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரச்னையை பெரிதுபடுத்தாமல் விட்டுள்ளனர்.

ஆனால் இந்த சம்பவம் பள்ளியில் படிக்கும் மற்ற மாணவிகளின் பெற்றோர்க்கு தெரிய வந்திருக்கிறது. பின் நடந்த கூட்டத்தில் தலைமையாசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதன்படி கடந்த திங்கள்கிழமை தலைமையாசிரியர் மீது நடவடிக்கை கோரி சாலைமறியல் நடந்தது. தொடர்ந்து ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பாக தலைமை ஆசிரியர் மீது கோவை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனிடையே தலைமையாசிரியரை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டது. பெற்றோர்கள் யாரும் தலைமையாசிரியர் மீது புகார் அளிக்க முன்வராததால் கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சார்பாக புகார் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் மாகாளியப்பன் கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 

தலைமையாசிரியர் ஒருவரே மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்ட சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கோர தாண்டவமாடும் கொடூர கொரோனா..! ஒரே நாளில் 242 உயிர்களை பறித்தது..!