கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லுாரி நாகர்கோவிலை அடுத்த ஆசாரிபள்ளத்தில் அமைந்துள்ளது. 

இந்த மருத்துவமனையில் குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவில் ஆரல்வாய்மொழி பகுதியில் செங்கல்சூளையில் பணியாற்றும் வடமாநில தொழிலாளியின் ஒன்றரை வயது குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தது. அவர்களுக்கு ஒத்துழைப்பாக இன்னொரு வடமாநில பெண் தொழிலாளியும் அவருடைய 11 வயது மகளும் மருத்துவமனை வளாகத்தில் தங்கியிருந்தனர். 

மருத்துவமனையில் காவலாளியாக பணியாற்றியவர் சுபின் (24). இவர் சம்பவத்தன்று இரவு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்றுள்ளார். பயந்து போன சிறுமி இதுகுறித்து தாயிடம் சொல்லி அழுதுள்ளாள். இதைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து செங்கல்சூளை அதிபர் உதவியுடன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சுபின் தலைமறைவானார். இந்தத் தகவல் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் காவலாளி பணியிடங்களை நிவர்த்தி செய்யும் தனியார் நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டது. 

உடனே சுபின் பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இத்தகவல் குமரி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் குமுதாவுக்கு தெரியவந்தது. அத்துடன் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைத்தில் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சுபின் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. இதுகுறித்து குழந்தைகள் நல அலுவலர் குமுதா கூறுகையில், “மருத்துவக்கல்லுாரியில் மொத்தம் 74 பணியாளர்கள் உள்ளனர். அவர்களில் 3 பேர்களே பெண்கள். அதிக பெண் காவலாளிகள் நியமிக்கப்பட வேண்டும். குற்றப்பின்னணி இல்லாதவர்களை இதுபோன்ற பணிகளில் முறையாக விசாரித்து நியமிக்க வேண்டும். சுபின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.