தன்னை பார்க்க வீட்டிற்கு தேடி வந்த கள்ளக்காதலியை கொன்று புதைத்து விட்டதாக வெளிநாட்டிலுள்ள அவரது கணவனுக்கே வாட்ஸப்பில் மெஸேஜ் அனுப்பிய மாற்றுத்திறனாளியை போலீசார் கைது செய்தனர்.

பொன்னமராவதி அடுத்த பொன்னைப்பட்டி கிராமத்தை சேர்ந்த பெருமாள் மனைவி பாண்டிச்செல்வி. கணவர் பெருமாள் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், மகள் மற்றும் மகனுடன் சொந்த ஊரிலேயே வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளி ரெங்கையா என்பவருக்கும், பாண்டிச்செல்விக்கும் முதலில் பழக்கம் ஏற்பட்டுள்ளது, காலப்போக்கில் தகாத உறவாக மாறியுள்ளது.

தினமும், பாண்டிச்செல்வி வீட்டுக்கு ரெங்கையா வந்து செல்வதும், கள்ளக்காதலன் ரெங்கையா வீட்டிற்கு பாண்டிச்செல்வி  வந்து செல்வதுமாக இருந்துள்ளார். இப்படி உறவை வளர்த்து வந்த நிலையில், கடந்த 22ம் தேதி 100 நாள் ஏரி வேலைக்கு செல்வதாக சொல்லிவிட்டு ரெங்கையா வீட்டுக்கு சென்ற பாண்டிச்செல்வி மீண்டும் திரும்பி வரவில்லை .இதையடுத்து மகளை காணவில்லை, என அவரது தந்தை சோலை முத்து பொன்னமராவதி போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே சிங்கப்பூரிலுள்ள பாண்டிச்செல்வியின் கணவருக்கு, வாட்ஸப்பில்அவரது மனைவியை கொலை செய்து புதைத்து விட்டதாகவும், தன்னை மன்னித்து விடுமாறும் கூறி ஒரு மெஸேஜ் அனுப்பியுள்ளார் ரெங்கையா. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெருமாள் கதறி அழுதுள்ளார். ரெங்கையா மெஸேஜ் அனுப்பிய தகவலை மாமனார் மூலம் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து ரெங்கையாவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், பாண்டிச்செல்விக்கு தனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதனால் ஆத்திரத்தில் அவரை கொலை செய்து வாழைக்குறிச்சியில் உள்ள கண்மாய் பகுதியில் புதைத்து விட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளான். இதையடுத்து ரெங்கையாவை அவன் கூறிய இடத்துக்கு அழைத்து சென்று, பாண்டிச்செல்வியின் உடலை தோண்டி எடுத்தனர்.

மேலும், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, ரெங்கையாவிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சரியாக நடக்கக் கூட முடியாத மாற்றுத்திறனாளி தனி ஆளாக எப்படி அந்த பெண்ணை கொலை செய்து, புதைத்திருக்க முடியாது என சந்தேகிக்கும் போலீசார், கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என விசாரித்து வருகின்றனர்.