உத்தரப் பிரதேச மாநிலம் பங்கார்மாவு தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார். கடந்த 2017-ம் ஆண்டு உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக , குல்தீப் சிங் செங்கார் மீது பாதிக்கப்பட்ட சிறுமி புகார் செய்தார்.

உன்னாவ் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்ததால், எம்எல்ஏ செங்கார் கைது செய்யப்பட்டார். அவரைக் கட்சியில் இருந்தும் பாஜக தலைமை நீக்கியது. இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது. 

விசாரணை முடிந்தநிலையில் டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் குல்தீப் செங்காரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுகிறது. தீ்ர்ப்பில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதும் குல்தீப் செங்கார் நீதிமன்றத்தில் கதறி அழுதார் 

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி மாவட்ட நீதிபதி தர்மேஷ் சர்மா , வழக்க விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகளைக் கடுமையாகத் தனது தீர்ப்பில் விமர்சித்துள்ளார். அவர் அளித்த தீர்ப்பில், கூறியிருப்பதாவது

சட்டத்தின்படி போக்ஸோ வழக்கை விசாரிக்கும் போது பிரிவு 24-ன் படி, பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்த விசாரணைக் குழுவில் கண்டிப்பாகப் பெண் அதிகாரிகள் இருக்க வேண்டியது கட்டாயம். 

ஆனால், வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள் குழுவில் பெண் அதிகாரிகள் கிடையாது.அதுமட்டுமல்லாமல் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் நிலை குறித்து சிறிதும் கவலைப்படாமல் விசாரணைக்கு அதிகாரிகள் தங்கள் அலுவலகத்துக்கு அழைத்துள்ளதைப் பார்த்து எனக்கு வியப்பாக இருக்கிறது. 

பாதிக்கப்பட்ட சிறுமியின் மனநிலை அறிந்து அவரினஅ இருப்பிடத்துக்கு நேரடியாக அதிகாரிகள் நேரடியாகச் சென்று விசாரணை நடத்தி இருக்க வேண்டும்.


கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி அந்த சிறுமி கடத்தப்பட்டு, சட்டவிரோதமாக அடைக்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். 

அந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த வழக்கில் விசாரணை முடிந்துள்ளது, ஆனால் 2019, அக்டோபர் 3-ம் தேதிதான் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளார்கள் ஏறக்குறைய ஒரு ஆண்டாகக் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாமல் சிபிஐ அதிகாரிகளைத் தடுத்தது எது என்பதைக் குறிப்பிடவில்லை.

அரசு தரப்பு சாட்சியங்களின் வாக்குமூலத்தில் குறிப்பிட்ட விஷயத்தைக் கசியவிட்டு வழக்கில் பாதிக்கப்பட்டவருக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தியது மிகுந்த அதிருப்தியாக இருக்கிறது "என அதிருப்தி தெரிவித்தார்